வித்தியா கொலைவழக்கில் விஜயகலாவிற்கு தொடர்பு – ஆங்கில ஊடகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 27ஆம் திகதி நீதாய தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில், பிரதான குற்றாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை பொது மக்கள் தடுத்து வைத்திருந்த போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றவாளியை விடுவித்துள்ளார்.

அத்துடன், சுவிஸ் குமாரை பொது மக்களிடம் இருந்து காப்பாற்றிய அவர், பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும், வித்தியாவுக்கு நீதி வழங்குவதற்கு சில பொலிஸ் உயர் அதிகாரிகள் கூட விசாரணைகளில் உதவவில்லை என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதான குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமார் தப்பிச் செல்வதற்கு உதவியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போதே கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே வித்தியா படுகொலை வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்