திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் தலைமைகள் தகுதியற்றவர்கள்.

இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளில் தமிழரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாகும். இந்த நிலையில் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரசோடு ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை ஒன்றும் எடுக்காது திலீபனது நினைவு தூபிக்கு அஞ்சலி செய்வது திலீபனது தியாகத்தை களங்கப்படுத்தும் நடவடிக்கை என அரசியல் கைதிகளது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ளோர் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளது வழக்குளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசோடு இணைந்து பதவியிலிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்றைய தினம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி பணிமனை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போதே அரசியல் கைதிகளது உறவினர்கள் சார்பில், அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்டவரும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான கோமகன் மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். எங்கள் நண்பர்கள் எங்கள் உறவுகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரது உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

ஆனால் நாங்கள் வாக்களித்து பதவிக்கு அனுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருந்து வருகின்றது. மாறாக அரசின் பதவி சுக போகங்களை அனுபவித்து வருகின்றதோடு, அரசுக்கு சார்பாக்கவுமே செயற்பட்டு வருகின்றது. வாக்களித்த மக்களுடைய வலிகளை துன்பங்களை புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமது உறவுகளை காப்பாற்றுமாறு கோரி, இயலாத வயதிலும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஆகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் தீர்க்கமான பதில் ஒன்றை போராடும் இந்த உறவுகளுக்கு கூற வேண்டும். அரசியல் கைதிகளை இந்த முறையும் ஏமாற்றி அவர்களது போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் கூட்டமைப்பின் தலைவர்கள் இனியும் செயற்பட கூடாது மாறாக அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்