குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரசியல் கைதிகளுக்கு நிர்ப்பந்தம்!

குற்றத்தை ஏற்றுக்கொண்டால் குறைந்தளவான தண்டனை கிடைக்குமென கூறி, குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கைதிகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, வழக்கையும் விரைவில் நிறைவுசெய்ய முடியுமென அரசியல் கைதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வவுனியாவில் நடைபெற்று வந்த வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றினால் ஏற்படும் சிக்கல் தொடர்பில் விளக்கி, சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், இறுதியில் வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய தவராசா, இவ்விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு, அநுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்ட வழக்குடன் தொடர்புடைய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுலக்ஷன், திருவருள் மற்றும் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்து வரும் உண்ணாவிரத போராட்டம், இன்றுடன் 10 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினர் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்