அரசாங்கத்தை நம்பாமல் எம்மை நாமே பாதுகாக்கவேண்டும் – சிங்கக்கொடி புகழ் சம்பந்தன்

அனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக எமது தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்துகலாசார திணைக்களம், மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக நடத்திவந்த சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.

கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட எதிா்க் கட்சித் தலைவா் தொடா்ந்தும் உரையாற்றுகையில்,

”வறுமையில் வாடியவா்ளை கவனிப்பதில் கூடிய அக்கறையுடன் செயற்பட்ட சுவாமி விபுலானந்தர், வடக்கு கிழக்கில் பல பாடசாலைகளை ஆரம்பித்தும் சேவையாற்றினார். முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தாா்

பன்மொழி வித்தகரான விபுலானந்தர் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் நூல்களை மொழி பெயர்த்துத் தந்தார். அதில் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான ஆங்கில நூல்களும் அடங்கும். பொதுவாக மக்களுக்கு கல்வியளிப்பதில் அவர் பாரிய பங்களிப்புக்களைச் செய்திருந்தார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினுடைய சேவைக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். அதன் காரணமாக இலங்கையில் வாழும் மக்களால் விபுலானந்தர் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். இலங்கையிலும் ஜேர்மனியிலும் தபால் தலையாக அவரது நினைவு முத்திரை வெளியிடப்பட்டது சிறப்பம்சமாகும்” என கூறினார்.

இந்த நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம் மற்றும் ஆன்மீக தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் எதிர்க்கட்சி தலைவர் கௌரவிக்கப்பட்டதுடன் விபுலானந்தரின் யாழ்நூலும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் விபுலூனந்தர் மாநாட்டினையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்