வவுனியா நீதிமன்றின் எல்லைக்குள்ளேயே விசாரணைகள் தேவை: கஜேந்திரகுமார் (காணோளி)

அரசியல் கைதிகள் குறித்த வழக்கின் விசாரணைகள் வவுனியா நீதிமன்றின் நியாயாதிக்க எல்லைக்குள்ளேயே இடம்பெறவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா நீதிமன்ற எல்லைக்குள்ளேயே குறித்த அரசியல் கைதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் வவுனியா பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே இக்கைதிகளின் மீதான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றின் நியாயாதிக்க எல்லைக்குள்ளேயே நடைபெறவேண்டும்.

இன்று நாட்டில் யுத்தசூழல் அற்ற பாதுகாப்பான சூழல் நிலவுகின்றதாகக் கூறப்படுகின்ற வேளையில் குறித்த கைதிகளின் விசாரணைகளை அனுராதபுரத்திற்கு மாற்றவேண்டிய தேவையில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இச்செயற்பாடுகள் ஓர் இனவாத நோக்கோடு முன்னெடுக்கப்படுகின்றன. இவை கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

இவர்களது வழக்கின் விசாரணைகளை வவுனியாவிற்கு மாற்றும் வரையில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து மேலும் பல பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்” என சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்