தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல .அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும்,சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது. இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே தமிழீழப்பெண்களின் எழுச்சி.

குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழினத்தைத் தலை நிமிர்த்தித் தன்மானத்துடன் வாழ வைத்த பெருமைக்குரிய விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தையே விடுதலைப்புலிகள் பெண்கள் படையணியாகும். நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழீழப்பெண்ணினம் விழித்துக்கொண்டது.

சமூகம் விழிப்படைந்தது,ஒருவட்டத்திற்குள் வாழ்ந்த பெண்கள் தமது விலங்கை தாமே உடைத்து வெளியேறினர். உலகமே வியக்கும் வகையில் ஈழப்பெண்கள் வாழ்ந்தனர்.ஆணுக்கு நிகர் பெண்ணானார்கள். சமூகத்தில் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாக மாறினார்கள்.நாணம் கொண்ட பெண்ணாகப் பார்க்கப்பட்டவள் சாதனைப்பெண்ணாக தோற்றம் பெற்றாள்.

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது வீராங்கனைகள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண்போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம் .

போரினாலே வாழ்க்கைத் துணைவர்களை இழந்ததாலும், போரினாலே வாழ்க்கைத் துணைவர்கள் அங்கவீனர்களாகி விட்டதாலும் குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாமல் சுமக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்பல்லாயிரம். கல்வியை கண்ணாகப் போற்றிய எமது சமுதாயத்திலே கல்வி கற்கக் கல்லூரி செல்லும் கன்னியர் படும் துன்பமோ மிகக் கொடியது. இராணுவத்தாலும், இராணுவத்தின் அருவருடிகளாலும் எமது இளம் பெண்கள் அனுபவிக்கும் உடலியல் மற்றும்உளவியல் ரீதியான ஒடுக்கு முறைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

2009ம் ஆண்டு மே மாதம் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனித்தது.எங்கள் மண்ணின் காவல் தெய்வங்கள் சரித்திரமானார்கள். அன்று தொடக்கம் எதிரி எமது மண்ணைச் சமூகச் சீர்கேட்டுக்கான மேடையாக்குவதில் சாதுரியமாகச் செயற்படுகிறான். போதைப்பொருட்கள், மது மற்றும் இன்னும் பல வழிகளில் எமது இளம் சமுதாயத்தை திசை திருப்புவதில் எதிரி முனைப்போடு செயற்படுகிறான்.

இன்று தாயகத்தில் வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். அன்று வெளியில் சென்ற பெண்பிள்ளை எப்படியாவது வீடு வந்து விடுவாள் என்று இருந்த பெற்றோர்கள், இன்று பிள்ளைகள் வெளியில் சென்ற கணமே மனஉளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

எம்உறவுகள் பலர் இளம் வயதிலே தம் வாழ்வைத் தொலைத்தவர்கள்.அவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்த போதும் இன்றைய கால கட்டத்தில் நம்பிக்கையுடன் நடைபயில முடியவில்லை .அன்றோஓலைக்குடிசையில் தூங்கியவர்களும் நிம்மதியாக தூங்கினார்கள் . இன்றோ மாளிகையில் தூங்குபவர்களும் தூக்கமின்றி தவிக்கிறார்கள் .

தமது உரிமைக்கான குரலை இழந்து,பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக, அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்துக்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம்பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். 2009ம் ஆண்டு மே மாத த்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும் அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்.

நன்றி
“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”

About இலக்கியன்

மறுமொழி இடவும்