கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்;தும் உயிர்ப்பறிப்புகள்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும் அநியாய உயிர்ப்பறிப்புகள் ஈழத்தமிழர்களை விடாது துரத்திவருதாகவும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது..,

அகதி தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்தோரை தங்கவைத்திருக்கும் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களிடையே தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் அது குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக சென்ற போது காவல்துறையினருடன் சென்ற சக ஈழத்தமிழர்கள் இருவரையும் கத்தி கொண்டு தாக்க முற்பட்டதையடுத்து காவல்துறை அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியம் ஹரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக சுவிட்சர்லாந்து காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் பின்னணி குறித்த ஆய்வு ஒருபக்கமிருக்க, தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு தற்காப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காது நேரடி முயற்சியாகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருப்பதனை அவரது உயிரிழப்பு உறுதிசெய்கின்றது. அதுவும் ஐரோப்பிய நாடொன்றில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டில் இவ்வாறு நடந்துள்ளமை மிக மோசமான முன்உதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரது தாக்குதல் முயற்சிக்கு இலக்கானதாக கூறப்பட்டவர்கள் காயப்பட்டதாக குறித்த செய்தியில் தகவல் எதுவும் இல்லை. தாக்குதலுக்கு இலக்காக இருந்தவர்களுக்கு காயமேதும் ஏற்படாதவிடத்து அவரை சுட்டுக் கொல்லும் அதியுச்ச நிலைக்குச் சென்றமை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான ரஜீவ் ராஜேந்திரன் (வயது-32) என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சோகம் ஆறுமுன்னே சுவிட்சர்லாந்து காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஹரன் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இனவழிப்பு கொடும்போரால் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் தாயகத்தில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு அகதிகளாக தஞ்சமடையும் ஈழத்தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவது மனிதாபிமானம் பேசும் நாடுகளின் தலையாய கடமையாகும். கடல்கடந்த தேசங்களில் தொடரும் இவ்வாறான அநியாய உயிரிழப்புகள் இனியும் நடந்தேறாதவண்ணம் சம்பந்தப்பட்ட நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென அமைச்சர் இவ் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இனவழிப்புக் கொடூரத்தில் இருந்து தப்பித்து உயிர்வாழ்தலை உறுதிப்படுத்தும் நோக்கில் அகதி தஞ்சம்கோரி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை அங்கும் விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள் மூலம் நாதியற்ற இனமாக ஈழத்தமிழினம் மாறியுள்ளமை மீண்டுமொருமுறை நிரூபனமாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ள ஹரன் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஈழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்