யோகேஸ்வரனின் அலுவலகத்தில் தாக்குதல் -பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் மட்டக்களப்பு காணி உதவி ஆணையாளர் ஒருவரினால் பொலிஸார் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் 3.30மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்துவருவதாகவும் ஏன் அவ்வாறு தெரிவித்துவருகின்றீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தாங்கள் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியானதுபோது தங்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடாத்தினேன்.ஆனால் தாங்கள் சூடுபட்டது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளிவந்தன.அதுதொடர்பிலேயே நான் மாவட்ட செயலகத்திற்கு சென்று அன்றைய மாவட்ட செயலாளரிடம் உண்மை நிலைமை தொடர்பில் கேட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்கும் காணி ஆணையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை காணி ஆணையாளர் தாக்க முற்பட்டதாகவும் அதன்போது அதனை தடுக்க முனைந்த பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தலைப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளரிடம் கேட்டபோது,
தன்னைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவதூறான கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் அது தொடர்பில் உண்மைநிலையை அறியச்சென்றபோது தாங்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது குறித்த பொலிஸார் வந்து தன்னை தாக்கமுற்பட்டதாக தெரிவித்தார்.
என்னைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் நான் தெளிவுபடுத்தவே சென்றேன் எனவும் தெரிவித்தார்.தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் சென்று எங்களது கருத்துகளை பகிர்வதற்கான சுதந்திரம் இல்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்