தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

மதுரை நகரின் மத்திய பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு மிக அருகே அமைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த விற்பனைச் சந்தை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு விட்டது. சந்தைக் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு வெற்றிடமாகக் கிடக்கிறது. சுமார் 1.25 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் அகழ்வராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என கீழடி அகழ்வராய்ச்சிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் இராமகிருட்டிணன் ஏற்கெனவே கூறியுள்ளார்.

சங்ககால நகரங்களான பூம்புகார், கொற்கை ஆகியவை கடலுள் அமிழ்ந்துவிட்டன. உறையூர் திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாக ஒடுங்கிவிட்டது. கரூர், முசிறி போன்றவை அழிந்து புதிய நகரங்கள் எழுந்து விட்டன. இவற்றில் அகழ்வராய்ச்சி செய்ய வேண்டுமானால் பெருமளவு கட்டிடங்களை இடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், மதுரையின் மத்திய இடத்தில் அமைந்துள்ள காலி இடத்தில் தற்போது பலமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இம்முயற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்த இடத்தில் தமிழக தொல்லாய்வுத் துறை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பணி முடிவடையும் காலம் வரை எந்த வகையான கட்டிடமும் அங்கு எழுப்ப வேண்டாம் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*