தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அ.ஈ.மக்களவை!

நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் வட மாகாணம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாயக மக்கள் அனைவரும் இக் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கி வெற்றிபெறச் செய்யுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் ஓர் அரசியற் தீர்மானத்தின் ஊடாக விடுவிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தப் போக்கினை கைவிட்டு இவர்களின் விடுதலைக்கு சிறிலங்கா அரசிற்கு நேரடி அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பொது அமைப்புகளால் இக் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களை முன்னிறுத்தி தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் தட்டிக்கழிக்காது உடனடி நடவடிக்கையின் மூலம் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண முன்வரவேண்டுமென உலகத் தமிழர்களின் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அச்சுறுத்தி பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 132 தமிழ் அரசியல் கைதிகளை சிறையிலடைத்து துன்புறுத்திவரும் சிறிலங்கா அரசானது தனக்கு உகந்தவர்காளச் செயல்பட்டுவரும் கருணா மற்றும் கே.பி. போன்றவர்களை சகல வசதி வாய்ப்புகளுடனும் சுதந்திரமாக செயற்பட அனுமதித்துள்ளதன் மூலம் அதன் இரட்டை முகம் அம்பலமாகிறது.

மற்றும் 2009ம் ஆண்டு சரணடைந்த 18000ற்கு மேலான தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், மக்கள், செயற்பாட்டாளர்கள் நிலவரம் என்ன என்பது இன்று வரையும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இவர்களைப் பற்றிப் பேசாமல் மறக்கடிக்கப் படுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசால் முடக்கிவிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை திருப்திப் படுத்துவதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் வதைக்கப்பட்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரே கொள்கையில் ஒன்றுபட்ட மக்களாக உறுதியோடிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் இக் கதவடைப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கி வலுச்சேர்க்குமாறு தாயக மக்களை உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
பேச்சாளர்
ஸ்ரிவன் புஸ்பராஜா க

 

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

About இலக்கியன்

மறுமொழி இடவும்