வடக்கில் கதவடைப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்தோடு, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என 19 அமைப்புக்கள் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஒன்றுகூடி பாரிய போராட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.

நாளைய தினம் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்த பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்தோடு, தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கைதிகள் மூவர் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஹர்த்தாலை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் சகல வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, அத்தியாவசிய மருத்துவ சேவைகளைத் தவிர ஏனைய சகல சேவைகளையும் இடைநிறுத்தி இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்