அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது – முதல்வரிடம் தெரிவித்த மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும், ஹர்தாலும் இடம்பெற்றுள்ள நிலையில் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வைத்து ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்த நிகழ்வில், அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஜானதிபதியினால் தீர்வு கிடைக்குமா? என கேள்வி கேட்கப்பட அதற்கு பதில் வழங்கிய முதலமைச்சர், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதற்கு, அதனைப் பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, மிகவும் நிதானமாக அரசியல் விடயங்களின் காரணமாக, தன்னால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதுள்ளது என்று கூறியதாக தெரிவித்தார்.

தான் அவ்வாறு விடுதலை செய்தால், உடனே தெற்கில் இருப்பவர்கள், இவர் சிங்களவர்களை ஒவ்வொருவராகப் பிடித்து சிறைக்குள் அடைத்துக்கொண்டு, தமிழர்களை மெதுமெதுவாக விடுதலை செய்கின்றார் என்று தன்னைத் தூற்றுவார்கள் என்றும் கூறியதாக முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்