சுவிஸில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் உதவுமா?

சுவிற்சர்லாந்து நாட்டின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தஞ்சம் கோரி இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கரன் (வயது 38) என்ற தமிழ் இளைஞர் 06/10/2017 அன்று சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்காளாகி அந்த இடத்திலேயே மரணமானார்.

அந்த செய்தி இரண்டு மூன்று நாட்கள் மக்கள் மத்தியில் சிலாகிக்கப்பட்டு ஓய்ந்த நிலையில் பழைய செய்தியாக போயிருக்கிறது.

ஐநா கூட்டத்தொடரின் போதும் மற்றும் மாவிரர்நாள் காலங்களிலும் ஐரோப்பிய நாடுகளில் முனைப்பு காட்டும் புலம்பெயர் அமைப்புக்கள் குறித்த இளைஞனின் கொலை பற்றிய விபரம் எதையும் சுவிஸ் பொலிஸாரிடம் கேட்டறிந்ததாகவோ சம்பவத்தின் தன்மை பற்றிய விபரங்களைப்பற்றி சுவிஸ் பொலிஸாருடன் விவாதம் நடத்தியதாகவோ எந்த செய்தியும் வரவில்லை.

குறித்த இளைஞர் சக குடியிருப்பாளர்களான இரு இளைஞர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு தர்க்கம் புரிந்ததாகவும் அவர்கள் பொலிஸ் உதவியை நாடியதாகவும் விசாரணைக்கு சென்ற பொலிசார் தனியாக சென்று குறித்த இளைஞரை விசாரிக்காமல் பொறுப்பற்ற விதமாக எதிராளிகளையும் கூட்டிச்சென்றதாலேயே நிலமை மோசமானதாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய அளவில் தமிழ் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் இதற்கு முன்னரும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் அடிதடிகள் நடந்தும் இருக்கின்றன, அப்படியான சமயங்களில் பொலிஸார் தலையிட்டு நிலையை சீர் செய்வதும், பிரச்சினைக்குரியவர்களை கண்டித்து வேறு முகாம்களுக்கு மாற்றம் செய்துகொள்வதுதான் தீர்வாக இருந்து வந்திருக்கிறது.

குறித்த சுப்பிரமணியம் கரன். விடயத்தில் முரண்பட்ட குடியிருப்பாளர்கள் இருவரையும் பொலிஸார் தம்முடன் கூட அழைத்து சென்றதனாலேயே நிலமை கொலையில் போய் முடிந்திருப்பதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு பேச்சுக்கு கொல்லப்பட்ட இளைஞரான கரன் முரண்பட்டவராக இருந்திருந்தாலும் கரனை தனியே அழைத்து விசாரித்திதுக்கலாம், தக்க தண்டனையை அவருக்கு வழங்கியுக்கலாம் அதி உச்ச தண்டனையாக குற்றவாளியை நாடுகடத்தியும் இருக்கலாம்.

2015 ஆண்டு தஞ்சம் கோரி இரண்டு வருடங்களாக சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் குறித்த இளைஞர் பற்றிய நடத்தை நடவடிக்கைகள் முகாமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

சுவிற்சர்லாந்து பொலிசார் பொறுப்பற்று நடந்துகொண்டிருப்பதாகவே ஐயம் எழுகிறது. இன்றைக்கு கரன், நாளை யாருக்கும் இது நடக்கலாம் எனவே குறித்த கொலை பற்றிய வெளிப்படையான விசாரணைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் அவர்களின் குடும்பத்துக்கு மேன்மையான நிவாரணத்தை சுவிற்சர்லாந்து அரசு செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் நிர்ப்பந்திக்கவேண்டும்.

கொல்லப்பட்ட இளைஞர் கரனின் “மனைவி பிள்ளைகளை சுவிஸ் அரசு பொறுப்பேற்று அழைத்துவந்து வாழ்வளிக்க நிறைய நியாயங்கள் இருக்கின்றன”. சுவிஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய அப்பேற்பட்ட வழிவகைகள் இருக்கின்றன.

அவற்றை சுட்டிக்காட்டி அந்த அபலை குடும்பத்தை நிலை நிறுத்தவேண்டிய பொறுப்பு சுவிஸில் இயங்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு உண்டு, ஐரோப்பிய அளவில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சியம் தலையிட்டு ஆவன செய்யும் என்று நம்புவோம்.

ஈழதேசம் செய்திகளுக்காக.
ஊர்க்குருவி.

About இலக்கியன்

மறுமொழி இடவும்