முல்லைத்தீவில் இரு குடிமக்களுக்கு ஒரு இராணுவம்,வெளியானது ரிப்போட்!

வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட்டுவந்திருக்கும் அறிவிப்புக்களை அர்த்தமாற்றதாக்கும் வகையான புள்ளிவிபரங்களுடனான அறிக்கையொன்றை இரு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டிருக்கின்றன.

கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் நிலையமும், இலங்கையின் சமத்துவத்திற்கும், நிவாரணத்துக்குமான மக்கள் இயக்கமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு குடிமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத்தொகை ஒரு இலட்சத்து 30 ஆயிரமாகும். அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தது 60 ஆயிரமாகும். இது இலங்கை பூராகவுமுள்ள சுமார் 2 இலட்சத்து 43 ஆயிரம் இராணுவத் துருப்புக்களில் 25 சதவீதமாகும்.

2014 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி நோக்குகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத்தொகை (130,322) இலங்கையின் சனத்தொகையில் 0.6 சதவீதமாகும். அதாவது அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு இரு குடிமக்களுக்கும் ஒரு படை வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இது அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையினர், விமானப்படையினர் எண்ணிக்கைக்குப் புறம்பானதாகும். கிடைக்ககூடியதாக இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினரதும், விமானப்படையினரதும் எண்ணிக்கையை கணிப்பிட இயலாமல் இருக்கிறது என்று இரு சிவில் சமூக அமைப்புகளும் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்