ஜெசிந்தா பீரிஸ் அவர்களின் மரணத்திற்கு இலங்கை அரசே பொறுப்பு! – வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடித் தேடியே ஓய்ந்து போன நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள மன்னாரை சேர்ந்த ஜெசிந்த பீரிஸ் அவர்களின் மரணத்திற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பாகும். வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடுகையில்..

இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்காது காலத்தை இழுத்தடித்துவரும் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப்போக்கே இன்று மேலும் ஒரு உயிரை பலியெடுத்துள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் உள்ள இலங்கை கடற்படையின் இரகசிய முகாம் ஒன்றில் இருந்து 9 வருடங்களுக்கு முன்னர் 12 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றிற்குரியவரது தாயாரே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரது குறித்த மகனான ரொஷான் லியோன் மற்றும் அவரது கணவர் அமலன் லியோன் ஆகியோர் கடந்த 2007 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில்தான் ரொஷான் லியோனின் அடையாள அட்டை கடற்படையின் இரகசிய முகாமில் கைப்பற்றப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த திங்கட் கிழமையும் கொழும்பு சென்றுவந்த நிலையிலேயே ஜெசிந்தா பீரிஸ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு போராடிவருபவர்களில் ஐந்து பேர் கடந்த ஆறுமாதத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கிழமை நான் வரமாட்டன். வழக்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்ககள் என்று கூறியதாக சக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ள தகவலானது, முடிவின்றித் தொடர்ந்து வரும் விசாரணை நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தி நிலையின் வெளிப்பாடகவே அமைந்துள்ளது. எப்படியாவது தனது கணவரையும் மகனையும் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நீதி கோரும் போராட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக ஓயாது ஈடுபட்டுவந்த இவர் கடைசிவரை தனது கணவர் மற்றும் மகன் குறித்த ஏக்கத்துடனேயே உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் தமது உறவுகளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற கவலையும், ஏக்கமும், ஆதங்கமுமே அவர்களது உறவினர்களை நடைபிணங்களாக்கியுள்ளது. அவ்வாறே இவரும் தாங்கமுடியாத மன அழுத்தத்தின் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பார். இதற்கெல்லாம் இலங்கை அரசே பொறுப்பாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமக்கிருக்கும் பொறுப்புக்கூறலை தடடிக்களிக்கும் நோக்கிலேயே தற்போதைய அரசும் செயற்பட்டுவருகின்றது என்பதனையே எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது வடக்கு விஜயத்தின் போது கிளிநொச்சியில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களைச் சந்தித்து பிரச்சினை குறித்து பேசுவதற்கு கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் அதன் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் குறித்து அனைத்துமே தெரிந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு கொழும்பிற்கு வருமாறு அழைத்திருப்பதானது போராட்டத்தை நீர்த்துப்போக வைப்பதுடன் உலகநாடுகளை ஏமாற்றுவதற்குமே ஆகும். தாயகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த எட்டு மாதங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகையில் அதுகுறித்து கவனத்தில் எடுத்திருக்காத ஜனாதிபதி பொது நிகழ்வுகளுக்கு வந்து திரும்புகையில் போனால் போகட்டும் என்ற போக்கில் சந்தித்துள்ளதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் கடைப்பிடித்துவரும் அலட்சியப் போக்கினை வெளிப்படுத்தியுள்ளார்.

அதைவிட, இவ்விடயத்தில் பேசுவதற்கு என்ன இருக்கு…? பேசித்தீர்வு காணும் விடயமல்ல இது. சட்டரீதியான வடிவத்தில் இருந்து அரசியல் பிரச்சினையாக உருமாற்றமடைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் அரசியல் கடந்து மனிதாபிமானத்துடன் அணுகித்தீர்வு காணப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக அறிவிக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை திசைதிருப்பி நீர்த்துப்போக வைக்கும் சூழ்ச்சிக்கு ஆளாகாது நாம் தொடர்ந்து போராடுவது ஒன்றே ஜெசிந்தா பீரிஸ் மற்றும் நீதிக்கான போராட்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்குச் நாம் செய்யும் கைமாறாகும்.

இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களாயின் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படுத்துவதுடன் அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்கப்பட வேண்டும். இவ் இரண்டு எதிர்வினைகளைத்தான் சம்பந்தப்பட்ட இலங்கை அரச தரப்பில் இருந்து உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அதைவிடுத்து பேச்சு நடத்த முற்படுவதானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை கரிசனையோடு அணுகுவதாக உலகை ஏமாற்றுவதற்கே ஆகும். இவ்வாறு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்