அரச நிறுவனங்களில் பல மில்லியன் மோசடி அம்பலம்

பதினைந்து அரச துறை நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி சம்பந்தப்பட்ட ஊழல்கள், இழப்புகள், மோசடிகள் மற்றும் தவறான கையாடல்கள் என்பன பல பில்லியன்கள் வரை செல்லும் சான்றுகளை அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் (கோப்) நான்காவது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

கோப் குழுவின் தலைவரான ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துநெத்தியினால் இந்த அறிக்கை இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், இந்த நிலைமைகளை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதேபோல், பிரதம கணக்கியல் அதிகாரிகள் என்ற வகையில் அமைச்சின் செயலாளர்களும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோப் குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

“இந்த அறிக்கைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்களை பிரதம கணக்கியல் அதிகாரிகள் என்ற வகையில் அமைச்சின் செயலாளர்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு நிலைமைகளை முன்னேற்றத்துக்காக மாற்றுவதற்கு அதன் பிரகாரம் செயற்படவில்லை என்றால் இந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது” என்று அவர் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கோப் குழுவின் முன்னிலைக்கு அழைக்கப்பட்ட 15 அரச பொறுப்பு முயற்சிகளில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்