சம்பந்தனைச் சந்தித்தார் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்!

தமிழ் மக்கள் விடயத்தில் ஐநாவின் அக்கறை தொடர்ந்தும் இருக்கும் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீபுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளருக்கும் எனக்கும் இடையில் பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பாகவும் தற்போது அந்த முயற்சியில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டேன்.

நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை அமுல்படுத்தல், மீள நிகழாமையை உறுதி செய்தல், காணாமல்போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்கவேண்டியதன் அவசியம், காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மையை கண்டறிதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரமான நிலைமை, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தேன்.

காணி விடுவிப்பு தொடர்பாக காணப்படும் தமதங்கள், மக்கள் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடுத்தப்படவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நான் எடுத்துரைத்தேன்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதில் காணப்படுகின்ற தாமதங்களையும் சுட்டிக்காட்டினேன்.

இந்த விடயங்களை உள்ளீர்த்துக் கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப், நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் பற்றி தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக அது தொடர்பில் தான் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு விடயங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் விடயங்களில் தங்களின் அக்கறை தொடர்ந்தும் நீடிக்கும் என உறுதிபடத் தெரிவித்த அவர் நான் குறிப்பிட்ட வியடங்களில் காணப்படும் காலதமதங்கள் தொடர்பில் தான் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டிய தருணத்தில் அந்த விடயங்களை துரிதமாக முன்னெடுப்பதற்கு அவர் இணங்கியுள்ளார் என்று ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் என்னிடத்தில் குறிப்பிட்டார் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்