தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை. மாவட்டப் பணியகம் திறக்கப்பட்டது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்டப் பணியகம் இன்று (21) திறந்துவைக்கப்பட்டது.

இன்று மதியம் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படிப் பணியகத்தைத் திறந்துவைத்தார்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்டங்கள்தோறும் பணிமனைகளைத் திறந்து வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதன் தலைவர்களும் சிங்கள அரசுக்குத் துணைபோகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு புதிய தலைமை ஒன்றை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களிடையே தெளிவான அரசியல் பார்வை இருக்குமாயின் அவர்களை எவரும் இலகுவில் ஏமாற்ற முடியாது.

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள அரசியல் யாப்பில், சிறிலங்கா ஒற்றையாட்சி நாடு என்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பது என்றும் முற்றுமுழுதாக வெளிப்படுத்துப்பட்டுள்ள போதிலும் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு ஆதரவளிக்கும் நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு அது தொடர்பாக பூரண அறிவு இல்லையாயின் மீண்டும் நாம் படுகுழியில் விழ நேரிடும் என்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெளிவுபடுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே, அதன் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் பணிமனை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பிரதேச மட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்