பனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு!!!

‘பனை, தென்னைகளிலிருந்து கள் இறக்குவதற்கு உரிமம் அவசியம் ஆனால் கித்துளுக்கு அவசியமில்லை’ என்ற போர்வையில் ஒரு நுட்பமான இன அழிப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிங்கள அரசு விடுத்திருக்கிறது.
படிப்படியாக தமிழர்களின் பொருண்மியப் பலமான பனை வளத்தை அழிக்கும் நாசகாரத் திட்டம் இது.

தமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்..
இந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை தலைவர் உணர்ந்து அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

ஏதோ திடீரென்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகப் பலர் நினைக்கிறார்கள்.
2009 இலிருந்து பனை வளம் இன அழிப்பு அரசால் இலக்கு வைக்கப்பட்டே வந்திருக்கிறது.
இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு,

வடக்கில் பனை மரங்களுக்கு பதிலாக இறப்பர் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. இதற்கென முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 600 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்யப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு அறிவித்திருந்ததை பலர் மறந்திருக்கலாம்.
இந்த செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நாங்கள் மே 18 அன்றிருந்த மனநிலைக்கே போய்விட்டோம்.
இன அழிப்பின் அதி உச்ச கட்டம் இது.

இது எப்படி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறோம்.

01. பனைக்கு பதிலாக இறப்பர் என்பதே அடிப்படையில் தமிழுக்கு எதிராக சிங்களம் என்பதற்கான குறியீட்டு நிலை அது. பனை என்பது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறதென்பதற்கப்பால் தமிழர்களின் பண்பாட்டு அடையாள வடிவமும் கூட. தமிழர்களின் பாரம்பரியமும் தொன்மமும் தொடர்ந்து பேணப்படும் ஒரு மரபியல் வடிவம் இது. தமிழர்களை குறியீட்டுரீதியாக சிதைக்கும் ஒரு இன அழிப்பு வடிவம் என்பதுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நீண்ட கால நோக்கில் வாழ்வியல்ரீதியாக முடக்கும் முயற்சி இது.

02. ஏற்கனவே ஒரு பயிர்ச்செய்கை செய்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலத்தை இறப்பர் பயிரிடுகிறோம் என்ற போர்வையில் நிலப்பறிப்பு செய்து ஆக்கிரமிப்பதுடன் அவர்களது நிலமும் பறிபோய் அவர்களது வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் முயற்சி இது.

03. இறப்பர் பயிர் செய்கை தொடர்பாக தமிழர்களுக்கு போதிய பயிற்சியில்லை. எனவே இதையே ஒரு காரணமாக்கி சிங்களவர்களை புதிதாக தமிழர் நிலத்தில் குடியேற்றும் நுண்ணிய இன அழிப்பு முயற்சி இது.

04. இவை எல்லாவற்றையும் விட தமிழர் வாழ்நிலத்தை – சிறுபயிர் விளை நிலத்தை
( இந்த இரண்டும் இணைந்துதான் தமிழ் விவசாயியின் வாழ்வுள்ளது) இறப்பர் பயிர் செய்கைக்குட்படுத்துவதால் அவர்கள் இடம்பெயரவோ அல்லது புலம் பெயரவோ நேரிடும். இதைத்தான் சிங்களம் எதிர்பார்த்து இதை செய்கிறது.

இப்படி நிறைய எழுதலாம்.

தமிழர்களின் தொன்மத்தை,மரபை, பண்பாட்டை சிதைக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும், நிலப்பறிப்புக்கு, சிங்கள குடியேற்றத்திற்கு வழிகோலும் இந்த முயற்சி சிங்களத்தின் அப்பட்டமான இன அழிப்பு நோக்கத்தை கொண்டது.

மே 18 அன்று கூட உணராத தோல்வியை இந்த செய்தியின் பின் நாம் உணரநேரிட்டது.
துரிதமாக இயங்கி பலரது கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு எதிர்ப்பை பதிவு செய்த பின்பே இந்த முயற்சி கைவிடப்பட்டது.

அப்போது இறப்பர். இப்போது கித்துள்.’கித்துள் வெல்லம் உங்களுக்கு ,பனை வெல்லம் எங்களுக்கு’ என்பது புதுவையின் புகழ்பெற்ற பாடல் வரிகள்.

பனை வளத்திற்கு நெருக்கடியைக் கொடுத்து கித்துளுக்கு முன்னுரிமை கொடுப்பதானூடாக இங்கு என்ன பதிலீடு செய்யப்படுகின்றது என்பது வெளிப்படையானது.’தமிழுக்கு பதிலாகச் சிங்களம்’ என்பதன் குறியீட்டு நிலைதான் இது.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பது வெளியாக தெரியாது. நுட்பமாக அது நடைபெறும். நாம்தான் வேறு பிரித்து அதை அறிந்து மக்கள் அதை எதிர்கொள்ளத் தயார்படுத்த வேண்டும்.
புதிதாக ஒரு மரத்தை புடுங்குவதோ, புதிதாக ஒரு குழிதோண்டுவதோ, ஒருத்தர் நோய்வாய்படுவதோ, ஒரு வீதி விபத்தோ அதை நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதன் இன அழிப்பு பின்புலம் தெரியும். சிறீலங்கா அரசு மிக வேகமாக அதை செய்துவருகிறது.

தாயகமெங்கும் வீதியோர ஆலமரங்கள் வீழத்தப்பட்டு அரச மரங்கள் நடப்பட்டு வருவதை யாராவது நுட்பமாக அவதானித்தீர்களா?
ஆனால் அது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை நாம் தற்போது மட்டுமல்ல அப்போதே அடையாளம் கண்டோம்.
ஆலமரம் விழுந்தால் அங்கு ஒரு ஆலமரம்தான் வைக்கப்பட வேண்டும். அல்லது அங்கு இனி மரங்களை நடாது விட வேண்டும்.
ஆனால் இனஅழிப்பு அரச நிர்வாகம் அங்கு அரச மரத்தை நடுகிறார்கள்.
ஆலமரம் என்பது தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் ஒரு அடையாளமாக இருக்கும் அதே சமயத்தில் அரச மரம் என்பது சிங்களவர்களின் மரபையும் தொன்மத்தையும் பேணும் ஒரு அலகாக இருக்கிறது
தமிழர் நிலத்தில் தமிழுக்கு பதிலீடாக சிங்களத்தை நிறுவும் முயற்சியாக- தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் ஒரு வடிவமாக ஆலமரத்தை வீழ்த்தி விட்டு அரச மரத்தை நடுகிறது இனஅழிப்பு அரசு.
பின்பு அதே அரச மரத்தின் கீழ் தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் சிறு தெய்வ வழிபாட்டு முறையான வைரவர் சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்கிறது இனஅழிப்பு அரசு.

அதனால்தான் அண்மைய வேள்வித் தடையை நாம் மிக உக்கிரமாக எதிர்க்கிறோம்.
பனைக்கு பதில் இறப்பர், பனைக்கு பதில் கித்துள், ஆல மரத்திற்கு பதில் அரச மரம்.
பார்த்தால் சாதாரண விடயம். ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால் இன அழிப்பின் அதியுச்ச வடிவத்தை அடையாளம் காணலாம்.

தாயகத்தில் காது குத்திலிருந்து கருமாதி வரை இனஅழிபபு அரசின் நுண்மையான பின்னணிகள் இருக்கின்றன.
எனவே நாம் விழிப்படைவோம்.

அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாக வேறுபிரித்து அறிந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்வினையாற்ற வேண்டும். மிகவும் கடினமான செயல்தான். ஆனால் வேறு வழி இல்லை.

விழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்..

-பரணி கிருஷ்ணராஜனி-

About இலக்கியன்

மறுமொழி இடவும்