நிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே! எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அதுதான்- வைகோ நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் தலைசிறந்த ஹீரோவான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நிஜ ஹீரோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமே என மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மனதில் ஒரு சிறிய இடம் கிடைத்ததை கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

ஈழம் 87 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், ‘யாழ். நெல்லியடியில் இருந்த இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 900 பேர் இருந்த அந்த இராணுவ முகாம் முற்றிலுமாக அழிந்து போனது.

இனி கொழும்பு வரை வந்து விடுதலைப் புலிகளின் தலைவர் தாக்குதல் மேற்கொள்வார் என்ற அச்சம் ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கு ஏற்பட்டது. புலிகளிடம் தோற்றுப்போய் விடுவோம் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டு விட்டது.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கே தனது ஆதரவு என 1985ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ ஊடகத்திற்கு பகிரங்கமாக தெரிவித்திருந்த ஜே.ஆர், 1986ஆம் ஆண்டு இந்தியா உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார்.

ஒப்பந்தம் என்பது இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் செய்துகொண்டிருக்க வேண்டும். சமரசம் பேசச் சென்ற இந்தியா எப்படி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்?

1986ஆம் ஆண்டு அனுபவத்திற்கு பின்னர் இனி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறி விட்டுச் சென்றார்.

இந்நிலையில், யுத்தத்தை நடத்தி செல்வதற்கு நிதியுதவி வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்காத எம்.ஜீ.ஆர். இரண்டு கோடி ரூபாய் நிதியினை வழங்கினார். எம்.ஜீ.ஆர் அவர்களின் இந்த நடவடிக்கையினை பார்த்து தனக்கு மயக்கம் தான் வரவில்லை என தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு யாரும் செய்ய முடியாத காரியங்களை எம்.ஜீ.ஆர் அவர்கள் செய்திருந்தார். தமிழ் சினிமாவில் தலைசிறந்த ஹீரோவாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இருந்துள்ளார்.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிஜ ஹிரோவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்திக்கு 8 கடிதங்கள் எழுதியிருந்தார்.

அந்த எட்டு கடிதங்களிலும், போர் நிறுத்தத்தை அறிவியுங்கள் நாங்கள் பேசுவதற்கு தயார் என்பதை வலியுறுத்தியிருந்தார். ஆனால், குறித்த எட்டு கடிதங்களுக்கும் ராஜீவ் காந்தி பதில் ஏதும் அனுப்பவில்லை.

அதன் பின்னர் நடைபெற்றவை கொடூரம். தமிழர்களின் பிணங்கள் நடை பாதைகளில் கிடந்தன. நாய்களும், நரிகளும் அவர்களின் உடல்களை இழுத்துச் சென்றன.

இந்நேரம் தமிழீழம் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த கனவை அழித்தது இந்தியாவே. இதனையே ஈழம் 87 என்ற இந்த புத்தகம் சொல்லியிருக்கின்றது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்