கேலிச்சித்திரக் கலைஞர் பாலா கைது ஜனநாயக விரோதமாகும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தனக்குள் ஏற்பட்டிருந்த ஆதங்கத்தை ஒரு படைப்பாளியாக வெளிப்படுத்திய பாலா அவர்களை கைது செய்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை சாதாராண பொதுமகனாக கடந்து செல்லாது ஜனநாயகம் ஏற்று அங்கீகரித்திருக்கும் கருத்துரிமைத் தளத்தில் இவ்விடயத்தினையும் பதிவுசெய்துள்ளார் பாலா. கந்துவெட்டி கொடுமைக்கு ஆளாகிய இசக்கிமுத்து என்பவரது குடும்பத்தின் தற்கொலை மரணம் தமிழ்நாட்டு எல்லை கடந்து உலகத் தமிழர்களிடத்தே பாரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில் தனது ஆதங்கத்தினை கேலிச்சித்திரமாக வரைந்த காரணத்திற்காகவே ஒருவரை பட்டப்பகலில் காவல்துறையை ஏவி கைது செய்துள்ளமையானது அராஜகமாகும். இசக்கிமுத்துவின் குடும்பத்தின் அநியாயச் சாவிற்கு காரணமான கந்துவெட்டி காறர்களையோ, முறைப்பாடு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதோ எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவராத சூழலில் அதுகுறித்து கேலிச்சித்திரம் வரைந்தவரை கைது செய்துள்ள செய்தி முந்திக்கொண்டு வந்திருப்பதானது தமிழ்நாட்டு அரசின் அராஜகப்போக்கினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலங்களாலும், மத்திய அரசினாலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கபட்டு வரும்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழ்நாட்டு அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இலங்கையில் இன ரீதியாக தமிழர்கள் அடக்கியாளப்பட்டு வருகின்றார்கள் என்றால் தமிழ்நாட்டில் ஆட்சி, அதிகார அத்துமீறலின் கீழான அரசியல் பழிவாங்குதலால் தொப்புள்கொடி உறவுகள் அடக்கியாளப்பட்டு வருவதன் நீட்சியாகவே இக்கைது சம்பவம் அமைந்துள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் கேலிச்சித்திரக் கலைஞர் பாலா மனிதாபிமானியாக விளங்கிவருவதன் சாட்சியே அவரது படைப்புகளாகும். சாட்சியமற்ற போரை முன்னெடுத்துஇலங்கை அரசு தனது இராணுவத்தை ஏவி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தமை குறித்தும் பாலா கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழர்களின் வாழ்வுரிமைக்காக அறவழியில் போராடிவருபவர்களையும், உரிமைக்குரல் எழுப்பி வருபவர்களையும் ஆட்சி, அதிகார பலத்தினை பிரயோகித்து கைது செய்யும் போக்கானது கருத்துரிமை தளத்தின் குரல்வளையை நசிக்கும் ஜனநாயக விரோத செயற்பாடாகும். ஆட்சியின் தவறுகளையும், அதிகார அத்துமீறல்களையும் வெளிப்படுத்தி வருபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

இவ்வாறான அரசியல் பழிவங்கல் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழர்களின் வாழ்வுரிமையினை பாதுகாத்து நிலைநாட்டும் வகையிலான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமே சிறந்த மக்களாட்சியை நிலைநாட்ட முடியும். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கும் கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்