யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்.

தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும் அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள். பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உயிர்நீத்த ஏனைய 6 மாவீரர்களின் நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரவரலாற்றை நினைவுகூரும் வகையில் வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வாளர்களால் கவிதைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் சிறிலங்காவின் உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், புவிசார் அரசியலை மையப்படுத்திய சிறிலங்காவின் வியூகங்கள்.. அதனை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளவது எவ்வாறு? அத்தோடு தாயக அரசியல் நிலவரமும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டிய நகர்வுகள் எனும் தலைப்புகள் தொடர்பாக தாயகத்தில் இருந்து வருகைதந்திருந்த இளஞ் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஆகிய திரு மணிவண்ணன் விஸ்வலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கணக்கிலெடுக்கமால், பிரிக்கப்படாத நாடு என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ்மக்களினால் நிராகரிக்கப்படும் ஒரு அரசியலமைப்பைக் காட்டி தமிழ்மக்களின் அரசியற் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையும் என சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்காவினால் காட்ட முடியாது என்பதையும் எடுத்துரைத்தார்.கலந்துரையாடலில் மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலலித்த வாறு கூட்டமைப்பின் மக்கள் விரோத போக்கை முறியடித்து தமிழ் மக்கள் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் முகமாக தமிழர் தாயகத்தில் புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும் வகையில் தாம் ஏனைய சில தரப்புகளுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி தளராது தொடர்ந்தும் பணியாற்றுவோம் என உறுதியெடுத்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்