பங்காளிகளை கவிழ்க்க தமிழரசுக்கு வந்தது காசு?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து பங்காளிக்கட்சிகளை மண்கவ்வ வைக்கும் வகையினில் தமிழரசுக்கட்சி தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக இரகசியமாக பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்ற 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்குள் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கூட்டமைப்பின் சில பங்காளிக்கட்சிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளன.

இந்நிலையினில் தமிழரசுக்கட்சி தனது வெற்றியை தக்கவைக்கும் நோக்கில் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக பெருந்தெகை பணத்தை அள்ளி இறைத்து வருவதாக பங்காளிக்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

குறிப்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி ரூபா நிதி அரசாங்கத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக வழங்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது வழமை. ஆனால் இம்முறை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு; பெருந்தெகை பணத்தினை அரசாங்கம் நேரடியாக வழங்கியுள்ளது.குறிப்பாக வடமாகாணசபை ஊடாக செலவிடப்படவேண்டிய நிதிகளையே அரசு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் டெலோ அமைப்பு பலம் வாய்ந்ததாக உள்ள நிலையினில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமிலநாதன் ஊடாக நிதி அள்ளி வீசப்பட்டுவருகின்றது. அவ்வாறு அள்ளிவீசப்பட்ட நிதி விளையாட்டுக்கழகங்களுக்கும் தேவாலயங்களுக்கும், இந்துக்கோவில்களுக்கும் சில ஊடக தரகர்களிற்கும் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

நானாட்டான்,வங்காலை,பங்கட்டிகொட்டில்,பள்ளிமுனை,பேசாலை,தலைமன்னார் போன்ற கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இவ்வாறு நிதி இரகசியமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 15 லட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் இந்த நிதி மிக இரகசியமான முறையில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் வழங்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக டெலோ மன்னாரில் அரசியலில் மண் கௌவவைக்கவென திட்டங்கள் வகுக்கப்பட்டு நிதி அள்ளி வீசப்படுவதாக தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்