நல்லாட்சி அரசும் துயிலும் இல்லங்கள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது!

மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் சென்று மாவீரர்களை நினைவு கூர்வதற்கு நல்லாட்சி அரசும் தடை விதித்துள்ளது. விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லைத்தைத் துப்புரவு செய்ய நேற்று அங்கு சென்ற மக்கள் அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்வரும் 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ளது. தாயகத்தில் உள்ள துயிலுமில்லங்களைத் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவீரர்களின் உறவுகளும் மக்களும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லைத்தைத் துப்புரவு செய்ய நேற்று அங்கு மாவீரர்களின் உறவுகளும்; பொதுமக்களும் அங்கு சென்றிருந்தார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் துயிலும் இல்லத்திலேயே அதிகளவான மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கல்லறைகளுக்கு மேல்தான் நீங்கள் இராணுவ முகாம் அமைத்துத்; தங்கியுள்ளீர்கள். இந்த முறையாவது மாவீரர்களின் உறவுகள் தமது பிள்ளைகளை விதைத்த இடங்களில் சுடரேற்றி நினைவு கூர அனுமதியுங்கள் என அவர்கள் இராணுவத்தினரைக் கோரியிருந்தனர். எனினும் எவரையும் அனுமதிக்க முடியாது எனப் படையினரர் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர்.

நல்லாட்சி அரசும் இதற்குத் தடை விதித்துள்ளமை தமக்குப் பெரும் ஏமாற்றமாக உள்ளதாகவும். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகச் சர்வதேச சமூகத்துக்குக் கூறிவரும் அரசின் உண்மை முகம் இதனால் அம்பலமாகியுள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்