வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் ஒன்றினைவோம்!

வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் எதிர்வரும் நவம்பர் 27 தேசிய மாவீரர் தினத்தன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம் என வவுனியா நகரசபையின் முன்ணாள் உபதலைவர் எம்.எம்.ரதன் அழைப்புவிடுத்துள்ளார்.

தேசிய மாவீரர் தினத்தினை சிறப்பாக அனுட்டிப்பதற்கு வடகிழக்கிணைந்த எமது தாயக மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் தயாராகி வரும் நிலையில் வவுனியா மக்களாகிய நாமும் தயாராக வேண்டும். எமது மண்ணின் விடுதலைக்காக போராடி வீரச்சாவினை தழுவிய புனிதமான மாவீரர்களை நினைவு கூறுவது ஒவ்வொரும் தமிழர்களின் கடமையாகும்.

வடகிழக்கில் காணப்படும் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு துரிதமாக பல பணிகள் முன்ணெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் எமது உணர்வுகளை புரிந்து கொண்டு இராணுவ முகாமை அகற்றி மாவீரர்களுக்கு எமது கடமைகளை செய்வதற்கு வழியமைத்து கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் தமது சுகஇலாபங்களை மறந்து இந்நிகழ்வினை மேற்கொள்ள முன்வரவேண்டும். சென்ற ஆண்டு வவுனியாவில் பல இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றது போன்று அல்லாமல் இம் முறை அனைவரும் ஒன்றினைந்து இதைமேற்கொள்வோம்.

இராணுவ முகாம் இருந்தாலும் அதற்கு முன்ணாள் அல்லது பொருத்தமான ஒர் இடத்தில் மாவீரர் தினத்தினை அனுட்டிக்க நாம் அனைவரும் தயாராகுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்