வரவு செலவு திட்டம்: கூட்டமைப்புக்குள் மோதல்?

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த வரவுசெலவுத் திட்டத்துக்கான முதல் நாள் முன்மொழிவு நிதி அமைச்சர் மக்கள சமரவீரவினால் வாசிக்கப்பட்டது.

“இந்த வரவுசெலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் பயக்காத திட்டமாக காணப்படுவதோடு, இந்த திட்டத்தினுடாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை கிடைக்க வேண்டுமாக இருந்தால் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நல்லதொரு வரவுசெலவுத்திட்டம்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மென்போக்கை கடைப்பிடித்து வருகின்ற நிலையில் சமர்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்ட கருத்தை வெளியிட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்