கட்சியினர் கைது அரசை எச்சரிக்கும் நாம் தமிழர் சீமான்.!

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் விவசாய நிலங்களை பாதிக்கவல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை சிதைந்துபோடக்கூடிய ஒஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஒஎன்ஜிசியின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கட்சியினர் கைது ; அரசை எச்சரிக்கும் நாம் தமிழர் சீமான்.!

அதில், “காவிரிப்படுகையைக் காவுவாங்கத் துடிக்கும் ஒஎன்ஜிசியின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரளும்போதெல்லாம் அவர்களைக் கைதுசெய்து சிறைலடைத்து மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தினை அடக்கி ஒடுக்க முயலும் அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகள் யாவும் சனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நன்னிலம் பகுதி போராட்டத்தில் கலந்துகொள்ளாத பேராசிரியர் ஜெயராமனை இவ்வழக்கில் முதன்மையாகச் சேர்த்திருப்பதே இவ்வழக்கின் உண்மைத்தன்மையும், உள்நோக்கத்தையும் அறியச் செய்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதன் மூலம் மண்ணிற்கும், மக்களுக்கும் ஏற்படும் படுபாதகத்தினைப் பரப்புரை செய்துவிடக்கூடாதென்பதற்காகவும், அவற்றிற்கெதிராக மக்களை அணிதிரள விடாது அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் போலித்தனமாக இவ்வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் போராட்டத் தீயினை ஊதிப்பெரிதாக்கி பற்றிப் பரவச்செய்யுமே ஒழிய, அவற்றினை அணைக்காது என்பது சமகாலப் போராட்ட வரலாறுகள் சொல்லும் பாடமாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்