இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயன்படுத்த முடியாதுள்ளது! அனந்தி சசிதரன்!

இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் சொத்துக்கள் மீண்டும் இழக்கப்படாதென்று உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் புலம்பெயர் வாழ் தமிழர்களின் நிதியை அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த முடியாதுள்ளதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கூறியுள்ளார். கடந்த 15.11.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று வாழ்வாதார உதவகளை வழங்கிவைத்து பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சு நிதியின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட லோ.வனஜா மற்றும் த.பவானி ஆகியோருக்கு சிற்றுண்டி தயாரிப்பதற்கான உபகரணத் தொகுதி, கரவெட்டி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ச.லீலாதேவி என்பவருக்கு நீர் இறைக்கும் இயந்திரம், ய.பிறேமரதி என்பவருக்கு சுயதொழில் முயற்சிக்கான ஈர அரிசி மற்றும் உழுந்து அரைக்கும் இயந்திரங்கள், து.கவிதா மற்றும் நா.சாந்தகுமாரி ஆகியோருக்கு தைய்யல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட யோ.சாந்தரூபி என்பவருக்கு சுயதொழில் முயற்சிக்கான ஈர அரிசி மற்றும் உழுந்து அரைக்கும் இயந்திரங்கள், இ.சிவசக்தி என்பவருக்கு தைய்யல் இயந்திரம், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ர.உதயமலர் என்பவருக்கு தைய்யல் இயந்திரம், அ.ஜாஸ்மின் கிறேஸ் மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சி.கிரிஜா ஆகியோருக்கு சுயதொழில் முயற்சிக்கான ஈர அரிசி மற்றும் உழுந்து அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ச.பிறேமா என்பவருக்கு சிறு வியாபாரத்திற்கான பொருட்கள், ச.செல்வராலசமலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இ.புவனா என்பவருக்கும் தைய்யல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது. இவர்களுக்கான பொருட்களை வழங்கிவைத்து அமைச்சர் பேசியபோது…

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் ஒட்டுமொத்த வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வித்திலான உதவிகளை கோருகின்றார்கள். ஆனால் எங்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிதி ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டியெழுப்ப போதாமல் இருக்கின்றது.

நிலமை இவ்வாறு இருக்கையில் வட மாகாணத்தை புறம்தள்ளி மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்பிற்கூடாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அவ்வாறு செயற்படுத்தும் திட்டங்கள் வெளிப்படையான தன்மையுடையதாகவும் உண்மையில் தேவையுடையவர்களை சென்றடையத்தக்கதாகவும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யப்படுகின்ற பல வேலைத்திட்டங்கள் கூட உரியவர்களுக்கு சென்றடையாத நிலையே காணப்படுகின்றது. கிடைத்தவர்களுக்கே திரும்பத் திரும்ப கிடைக்கும் நிலையும் காணப்படுவதான முறைப்பாடுகள் எமக்கு வந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் நாங்கள் உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் என்றில்லாது வட மாகாணம் முழுமைக்கும் எமது அமைச்சின் கீழ் வருகின்ற நிதியில் உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு கிடைக்கின்ற நிதி குறைவாக இருந்தாலும் கிடைக்கின்ற நிதியைக் கொண்டு சிறியளவிலேனும் உதவிகளைச் செய்து வருகின்றோம். இவ்வாறு கிடைக்கின்ற உதவிகளைக் கொண்டு நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

எங்கள் அமைச்சின் கீழ் தொழிற்துறையை வளர்த்தெடுக்கும் வகையில் தொழில்துறைத் திணைக்களத்தின் ஊடாக கிராமங்கள் தோறும் சிறு சிறு தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு எதிர்கால்த்தில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். கிராமங்கள் தோறும் என்னென்ன வளங்கள் கிடைக்கின்றதோ அவற்றைக் கொண்டு அங்கு சிறு தொழில் முயற்சிகளை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதே போன்று புலம்பெயர் தமிழர்களும் பிரதேசசபை ரீதியாக தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு உதவிகளைச் செய்வதற்கு தயாராக உள்ளார்கள். அந்த நிதியை இங்கு முதலிடுவதற்கான உத்தரவாதம் இலங்கை அரசினால் கிடைக்கப்பெறாமையினால் அவர்களை ஊக்குவிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இனி ஒரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதத்தை எந்தவொரு நாடும் அல்லது இலங்கை அரசாங்கமும் எங்களுக்குத் தரவில்லை. எங்களுடைய சொத்துக்கள் இழக்கப்படாது என்ற உத்தரவாதத்தை தராதநிலையில் நாங்கள் தொடர்ந்து எதுவதும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.

தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பு குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட இலங்கை அரசு இன்னும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிரைறவேற்றாது வெற்று வாக்குறுதிகள் மூலமாக காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகின்றது. பொறுப்புக் கூறலை வலியுத்த வேண்டிய சர்வதேச சமூகமும் தமது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி மிதமான போக்கில் செயற்பட்டுவருகின்றது.

மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டதற்கான பொறுப்புக்கூறலை சம்பந்தப்பட்ட இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு உரிய அழுத்தங்கள் வழங்கப்படாமையால் மீளவும் அவ்வாறான குற்றங்கள்நி கழாதென்பதனை யாராலும் அறுதியிட்டு கூறிவிட முடியாதுள்ளது.

இவ்வாறான கூழ்நிலையில், அவ்வாறு கொண்டுவரப்படும் நிதி மூலதனத்தை பாதுகாக்க முடியுமென்ற உத்தரவாத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு நாம் எவ்வாறு வழங்கமுடியும்? என்று கேள்வியெழுப்பியிருந்த அமைச்சர், தொடர்ந்தும் உங்களுடைய முன்னேற்றத்திற்காக வடமாகாண மகளிர் விவகார அமைச்சு தன்னாலான பணிகளை வரையறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளும் எனவும் மேலும் தெரிவித்திருந்தார். 

About காண்டீபன்

மறுமொழி இடவும்