தமிழரசுக் கட்சிக்கு நான் மாறுவதாக வந்த செய்தியில் உண்மையில்லை – இந்திரராஜா

தமிழரசுக்கட்சிக்கு மாறவேண்டும் என்ற எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை என்பதுடன் தமிழரசுக்கட்சியை சார்ந்தவர்கள் கூட என்னுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கு கட்சிக்கு கட்சி தாவல் மேற்கொண்டுள்ளீர்கள் என ஊடகங்களில் செய்தி வந்துள்ளமை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழரசுக்கட்சிக்கு மாறவேண்டும் என்ற எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை என்பதுடன் தமிழரசுக்கட்சியை சார்ந்தவர்கள் கூட என்னுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை.

அத்துடன் எதிர்காலத்தில் கூட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியிலிருந்து பிரிந்து செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியாக இருந்தாலும் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி கட்சிகளிடம் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2013 ஆண்டு மாகாணசபை தேர்தலின்போதும் 2011 பாராளுமன்ற தேர்தலின்போதும் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போதும் ஒரு தேர்தல் அறிக்கையை முன்வைத்துதான் மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டிருந்தோம்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டம் எடுத்த முடிவுக்க அமைய தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம்.

2009 க்கு பிற்பாடு போர் முடிவடைந்து எட்டு வருடங்களும் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வருடங்களும் முடிந்து விட்ட நிலையில் மக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கனவான் ஒப்பந்தங்களுக்கு முடிவுகள் எதுவும் காணப்படவில்லை. அண்மையில் வெளியான இடைக்கால அறிக்கையில் கூட ஆரோக்கியமான விடயங்கள் இருப்பதாக தெரியவில்லை. இவைகள் குறித்து அடிப்படையில் சில பிரச்சனைகளை நாங்கள் தீர்க்க வேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கிய கட்சி என்ற அடிப்படையில் கட்சியின் ஆகக் குறைந்த விருப்பங்களான அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்திடம் இருக்கும் காணிகளை விடுவிப்பது மற்றும் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களில் எந்த முன்னேற்றங்களும் காணப்படவில்லை என்பதுடன் விளம்பரத்துக்காகவே சில விடயங்கள் செய்யப்பட்டுள்ளது அடிப்படையில் எந்த மாற்றங்களும் மக்களுக்கு ஏற்படவில்லை.

ஆகவே நாங்கள் மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதை அரசாங்கத்தின் கனவான் ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பதாக நினைக்க கூடாது.

அரசினுடைய நல்லெண்ணத்தை அவர்கள் காட்ட தவறிவிட்டார்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற பயம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகள் உள்ளடக்கப்படாமையினால் அதனை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டது.
இக்கால கட்டமானது ஒரு வரலாற்று தேவையாகவே நாங்கள் கருதுகிறோம்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியை பலவீனப்படுத்துவது என்பது முதலாளித்துவ அரசியலின் ஒரு குணாம்சமாகவே பார்க்க முடியும். தமிழரசுக்கட்சியின் செயல்பாடுகள் எமது கட்சியை அவர்கள் எதிரிகளாக பார்க்கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதென்பது ஒரு கஸ்டமான விடயமாகவே இருக்கிறது. ஆனால் கொள்கைரீதியாக நாங்கள் வெளியேறவில்லை. மக்கள் முன் வைத்த அறிக்கையின் பிரகாரம் செயற்படாத கட்சிகள்தான் வெளியேறியுள்ளன. மக்களுக்கு முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்கள் அதிரிப்தி கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. அது மாகாணசபை செயல்பாடாக இருந்தாலும் பாராளுமன்ற செயல்பாடாக இருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மக்கள் எதிர்ப்பை காட்டுவது இயல்பான விடயம். சம்பந்தன் ஐயா அண்மையில் கூறியிருக்கிறார் இடைக்கால அறிக்கையில் கூறியிருக்கும் விடயங்கள் தோற்றுபோகுமாயிருந்தால் அதற்கு சர்வதேசம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சம்பந்தன் ஐயா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரசியல் என்பது கட்சி நடத்தி கொடி பிடித்துக்கொண்டிருப்பதில்லை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குதான் கட்சிகள் இருக்க வேண்டும். இடைக்கால அறிக்கைகள் குறித்து மக்களுக்க தெளிவுபடுத்தப்பட்டதா? ஐக்கியநாடுகள் சபையில் இலங்கைக்கு இரண்டுவருடம் அவகாசம் வழங்கியபோது கட்சிக்கு தெரியப்டுத்தினார்களா? இல்லை ஆகவே தமிழரசுக்கட்சி தனியாக முடிவெடுத்து செயல்ப்பட்டபோது ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்ணணி பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் எவ்வாறு முடிவெடுப்பீர்கள் என குரல் எழுப்பியதன் பின்னராக வவுனியாவில் கூட்டமொன்று கூட்டப்பட்டது.

இவ்வாறான தமிழரசுக்கட்சியின் பிழையான நடவடிக்கைகள் தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி வெளியேறியமைக்கு காரணம் என தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்