வென்றது வடமாகாண முதலமைச்சர் அமைச்சு!

வடமாகாண முதலமைச்சர் அமைச்சு முதலாவது இடத்தை பெற்று சாதனை புரிந்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்;ராட்சி மன்றங்கள் உள்ளடங்கலான தேசியமட்டத்திலான 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு தங்க, வெள்ளி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 13ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மிகத்திறமையான ஏழு நிறுவனங்கள் வடமாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க விருதுகளை பெற்றுக்கொண்டன. அதியுயர் புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்ட திணைக்களங்களில் முழுமையான 100 புள்ளிகளையும் பெற்று முன்நிலை வகித்த வடமாகாணத்திற்கான ஏழு நிறுவனங்களில் முதலமைச்சரின் அமைச்சு முதலாவது இடத்தை பெற்றிருந்தது. அத்துடன் வடமாகாண சுகாதார அமைச்சு இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன. அதேபோன்று மூன்றாம் இடத்தை பிரதிப் பிரதம செயலாளர், நிதி அலுவலகமும் நான்காவது இடத்தை சுகாதார திணைக்களமும் ஐந்தாவது இடத்தை நீர்ப்பாசனத் திணைக்களமும் பெற்றுக்கொண்டன. ஆறாவது ஏழாவது இடங்களை உயர் புள்ளிகள் அடிப்படையில் 99 புள்ளிகளைப் பெற்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களமும் 95 புள்ளிகளைப் பெற்று வீதி அபிவிருத்தித் திணைக்களமும் பெற்றுக்கொண்டமையை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.
அதேபோன்று நிதிமுகாமைத்துவத்தில் சிறப்பான பெறுபேறுகளைப்பெற்று பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நல்லூர்ப் பிரதேச சபை,வவுனியா (தெற்கு) பிரதேசசபை, மன்னார் பிரதேசசபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை மற்றும் கரைத்துரைப்பற்றுப் பிரதேசசபை ஆகிய ஐந்து பிரதேச சபைகளுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

வடமாகாணத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ராட்சி மன்றங்களில் 2015ம் ஆண்டில் நிதி நடவடிக்கைகளின் அதியுயர் செயலாற்றுககைளை திறமையாக மேற்கொண்ட அவ்வத் திணைக்களங்களின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும்அனைத்துஉத்தியோகத்தர்களையும் பாராட்டிக் கௌரவிப்பதுடன் இவர்களின் முன்மாதிரியில் இனிவரும்காலங்களிலும் இதுபோன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடுமையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டு அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய எல்லா நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேனென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புள்ளி அடிப்படையில் ஆளுநர் அலுவலகம் கடைசி நிலையில் பின்தங்கியிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்