இராணுவப் புலனாய்வாளர்களின் கெடுபிடிக்கு மத்தியில் கோப்பாய் துயிலுமில்ல வாயிலில் சுடரேற்றி வணக்கம்!

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த வளாகத்தின் நுழை வாயிலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதை தடுக்கும் வகையில் அதிகளவான இராணுவப் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து ஒன்றும் வழிமறித்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் தின நிகழ்வை தடுக்கும் வகையில் ஐம்பதிற்கு மேற்பட்ட இராணுவப் புலனாய்வாளர்கள் சிவில் உடையில் துயிலுமில்ல வாசலில் குழுமியிருந்தார்கள். நினைவேந்தல் நிகழ்வை நடத்துபவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ததையும் பொருட்படுத்தாது தமிழின விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த மான மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி வணக்கம் செலித்தப்பட்டது.

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மாவீரர்கள் நினைவாக பொதுச்சுடரினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்