மக்களை கவரும் தினகரன் – ஆடிப்போய்யுள்ள அதிமுகவினர்!

ஆர்.கே. நகரில் இரவோடு இரவாக 50,000 குக்கர்களை தினகரன் தரப்பு இறக்கியிருக்கிறது. இவற்றை கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வாக்காளர்களிடம் விநியோகிக்கும் பணி வெகுஜோராக நடந்து வருகிறதாம்.

டி.டி.வி.தினகரனே எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்.கே.நகரில் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க பாஸ் என ஆர்வத்துடன் கேட்கின்றனர் வாக்காளப் பெருங்குடிமக்கள்.

ஆளும்கட்சி எவ்வளவு கொடுக்கிறதோ அதைவிட ஆயிரம் ரூபாய் அதிகமாகத் தருவார் தினகரன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க மருது கணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், டி.டி.வி.தினகரன் ஆகியோர்தான் ஆர்.கே.நகரில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்.

இவர்களில் அ.தி.மு.கவுக்குத் தோல்வியைக் கொடுக்கும் வகையில் தினகரன் திட்டம் தீட்டி வருகிறார். துரோகம் செய்துவிட்டுப் போனவர்களின் பிரஷரை அதிகரிக்கச் செய்வதற்காகவே பிரஷர் குக்கர் வந்து சேர்ந்திருக்கிறது என உற்சாகமாகப் பேசினார் தினகரன்.

தொப்பி சின்னம் கிடைக்காத சோகம், இன்னும் அவருக்குள் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. நேற்று குக்கர் சின்னம் கிடைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கான குக்கர்களை தொகுதிக்குள் இறக்கிவிட்டனர் தினகரன் ஆட்கள். நேற்று இரவு குக்கர் விநியோகம் நடந்ததாகப் பதிவிட்டுள்ளார் சி.பி.எம் கட்சியின் முன்னாள் வேட்பாளர் ஆர்.லோகநாதன். அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ஆர்.கே.நகர் தமிழன் நகரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பாதிரிமார்களின் துணை கொண்டு கிறிஸ்துமஸ் பரிசாக வீடுகளுக்கு குக்கர் விநியோகம் துவங்கியது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு அ.தி.மு.க தரப்பினருக்குக் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், தொகுதிக்குள் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் குக்கர் கொடுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லும் நோக்கில், கேக் உடன் குக்கரைக் கொடுத்துள்ளனர். இதற்கு சில திருச்சபை புள்ளிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது, பா.ஜ.கவின் செயல்பாடுகளுக்கு எதிராக தினகரன் குரல் கொடுத்து வருகிறார். அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது நம் கடமை என்கின்றனர். தேவாலயங்களில் கூட்டங்களை நடத்தி, தினகரனுக்கு ஓட்டுப் போடச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இவர்கள் மூலமாக வீடுகளுக்கு நேரடி விநியோகம் நடக்கிறது. உங்களுக்குத் தேவையானது கட்டாயம் வந்து சேரும். டி.டி.விக்கு ஓட்டுப் போடுங்கள் என தினகரன் ஆதரவாளர்கள் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.

இதைப் பற்றியெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தலுக்கான மொத்த செலவாக 50 கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய இருக்கிறார் தினகரன். கடந்தமுறை ஓட்டுக்கு ஐந்தாயிரம் வரையில் பேரம் பேசினார்கள். இந்தமுறை இரு மடங்காக இருக்கும் என்கின்றனர். தேர்தல் நெருங்குவதற்குள் தொகுதியை ரணகளப்படுத்த இருக்கிறார் தினகரன். தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் மாற்றுக் கட்சி ஆட்களையும் தினகரன் தரப்பினர் விலை பேசுகின்றனர். இதனால் பூத் வேலை செய்வதற்கு நல்ல ஆட்கள் இல்லாமல் திணறுகிறார்களாம்.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். அவர்களைத் தோற்கடித்தால்தான் தனக்கு அரசியல் வாழ்வு என நம்புகிறார். அ.தி.மு.கவுக்கு ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கிறது என்றால், அதில் ஐம்பதாயிரம் வாக்குகளைப் பிரித்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். இதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருக்கிறார். குடும்பத்தை சமாதானப்படுத்தவும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குப் பாடம் புகட்டவும் ஆர்.கே.நகரைப் பயன்படுத்த இருக்கிறார். வரக் கூடிய நாட்களில் தினகரன் பிரசார வியூகம் எதிர்த்தரப்பினருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுக்கலாம் என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவு பிரமுகர் ஒருவர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்