மக்களை கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு – தேர்தல் பிரச்சாரத்தில் குதிப்பு!

தமிழகத்தின் தென்கரையான கன்னியாகுமரியில் தமிழக அரசின் மீதான நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது. தென் தமிழக மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது ஒகி புயல். புயலில் சிக்கிய மீனவர்கள் ஏராளாமானோர் இன்னும்கூட கரை திரும்பவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைக்கூட அரசுகள் செய்யவில்லை. இவையெல்லாம் குமரி மக்களின் கடும் கோபத்துக்குக் காரணமாக இருக்கிறது. ‘கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்’ என அவர்கள் அறிவிக்கும் அளவுக்கும் தமிழக அரசின் மீது நம்பிக்கையின்மை அவர்களிடம் மேலோங்கி வருகிறது.

கடும் புயல் தாக்கப்போகிறது என்பது அறிந்தும், மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத்தவறிவிட்டது என்றும், புயலின் கோரத் தாண்டவத்துக்குப் பின்னரும் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் சொல்லித் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள் குமரி மக்கள்.

“நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம், லட்சத்தீவுப் பகுதிகளில் கரை சேர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களை அழைத்து வரக்கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கொந்தளிக்கிறார்கள் மீனவ மக்கள்.

கேரளாவிலும் புயல் தாக்கியது. அங்கும் மீனவர்கள் புயலில் சிக்கிக் காணாமல் போனார்கள். ஆனால், உடனடியாக மீட்புப் பணிகளைத் துவங்கியது கேரள அரசு. மீனவக் குடும்பங்களை நேரில் சந்தித்துப் பேசி, மீட்புப் பணிகள்குறித்து விளக்கினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். ஆனால், தமிழகத்தில் மீட்புப் பணிகள் உரிய நேரத்தில் செய்யப்படவில்லை. முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடக்கூட வரவில்லை. இதுதான் தமிழக மீனவர் குடும்பங்களின் பெருங்கோபமாக வெடித்திருக்கிறது.

‘ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களில் ஏராளாமானோரைக் காணவில்லை. மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை’ எனச்சொல்லி குமரியில் 16 மணி நேரம் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர் குமரி மக்கள். தமிழகத்தைப் பரபரக்க வைத்தது அந்தப் போராட்டம். ‘தமிழக அரசுமீது நம்பிக்கை இல்லை. கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்’ என மீனவர்கள் கொந்தளித்துக்கொண்டிருந்த நேரம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்களோடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களுக்கு தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருப்பவருக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்ய அடுத்தடுத்து இடைவிடாது ஆலோசனைச் செய்வதற்கு நேரமிருக்கிற முதல்வருக்கு, புயல் புரட்டிப்போட்ட குமரிக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லையா என கொந்தளித்தார்கள் மக்கள். கடலுக்குச் சென்ற தங்களின் குடும்பத்தாரின் நிலை என்ன என்று தெரியாமல் 8 நாள்களாக பதைபதைப்புடன் இருக்கிறார்கள் அவர்கள். ஆனால், அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய முதல்வர், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், ஆர்.கே.நகர் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்