சிறிலங்கா தேயிலைக்கு ரஷ்யாவில் தடை, மைத்திரி கவலை, தடை நீக்குமாறு கெஞ்சிக் கடிதம்

சிறிலங்காவின் தேயிலை தமக்கு வேண்டாம் எனக் கூறி, அத்தேயிலை இறக்குமதிக்கு தடை விதித்த ரஷ்யாவின் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பணிவான கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ரஷ்யாவின் மேற்படி முடிவினால் சிறிலங்காவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் செல்லும் என ஜனாதிபதியும் அமைச்சர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இதனாலேயே தமது தேயிலை இறக்குமதிக்கான தடையைத் தளர்த்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அவசரமான கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்த கடிதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கைகளுக்கு கிடைத்திருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் திசாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த தற்காலிக தடைவிதிப்பு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையே எமக்கு அறியக்கிடைத்தது. இதனையடுத்து ஜனாதிபதி சிறிசேன கடந்த திங்கட்கிழமை இரவு ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தார். அந்தக் கடிதம் இப்போது புட்டினின் கைகளுக்கு கிடைத்துள்ளது என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கடிதமானது ஜனாதிபதி சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் இருக்கும் உறவின் நெருக்கத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பொதியில் வண்டொன்று இருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே ரஷ்யாவினால் மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்