வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டும்!

யுத்தத்திற்கு பின்னரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணரவைத்துள்ளது. மக்கள் தங்களுக்கே வாக்கு போடுவார்கள் என்ற மமதையில் தன்னிச்சையாக மக்களின் விருப்பங்களை புறந்தள்ளி அரசியல் முடிவுகள் எடுப்பது மக்களை ஏமாளிகளாக தான் கூட்டமைப்பு கருதுகிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

தற்போது பதவியில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பை அதன் இரட்டைவேட நாடக ஏமாற்றும் ஏமாளியாக்கும் செயற்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு மனம் மாற தயாராக இருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பை கலைத்து எமது பலத்தை வேறொரு தெரிவை கொண்டுவர வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர்.

தமிழ் மக்கள் யார் என்ன சொன்னாலும் தாங்கிக் கொண்டு இருப்பவர்கள் அல்ல.
அதிகாரமற்ற அரசியல், ஆழுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு, என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் அதனை தட்டி கேட்க முடியாத மக்கள் பிரதி நிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பன இன்று இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இளைஞர்கள் தமக்கான அரசியல் பாதையை தெரிந்தெடுத்துள்ளனர். கூட்டமைப்பும் சரியானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாமல் தமக்கு செம்பு தூக்கும் அல்லக்கைகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். இளைஞர்களின் கொந்தளிப்பினை அல்லது அவர்களது அரசியல் வேட்கையை கூட்டமைப்பின் அல்லக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக தான் தோன்றித்தனமாக ஊரில் உள்ள கழிசறைகளையும் ஊழல் பேர்வழிகளையும் தமக்கு செம்பு காவினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேட்பாளராக அறிவித்து மக்கள் மீது தமது அடிமைத்துவ மன நிலையை நிலைநாட்டி உள்ளனர்.

இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இன வாதிகள் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்தும் அளவுக்கு அல்லது இனவாத கட்சிகளுக்கும் பெரும்பான்மை இன ஆளும் கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவளிக்கும் நிலைமைக்கு மக்களும் இளைஞர்களும் வந்துவிட்டனர். இப்போது அரசியல் நிலவரம் மோசமாக போய்விட்டது.

அடிமை தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் இருந்து கொண்டு அதிகாரத்தை தேர்தல் பாதையில் அரசோடு ஒன்றித்து வென்றெடுக்கலாம் என்று கூறுவது பகல் கனவே அது மக்களை ஏமாற்றும் செயலே.

குறைந்த பட்சம் மக்கள் திரள் போராட்டங்களால் செய்யக் கூடிய மாற்றங்களை கூட தேர்தல் பாதையில் அரசோடு இணைந்து பெறும் அதிகாரங்களை கொண்டு செய்ய முடியாது என்பதே உண்மை நிலை.

கூட்டமைப்பு தமிழ் அரசியல் தலைமைகள் அடக்குமுறைகளை உரிமை மீறல்களை உரிய விதத்தில் தட்டி கேட்க முடியாத கையாலாகாத தலைவர்களாக உள்ளனர். இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கே நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சண்டையோ அல்ல இது எமது இனத்தின் இருப்புக்கான அரசியல் போராட்டம்.

இதில் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்துவிட்ட தமிழ் சமூகம் போராடி மிஞ்சி இருப்பதையும் இப்போது இழப்பதாக உணர்கின்றனர்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை தமிழ் மக்களையும் இளைஞர்களையும் ஒட்டுக் குழுக்ளின் பின்னால் செல்ல அல்லது சுயேட்சையாகவோ களத்தில் இறங்க தூண்டியுள்ளது. இது குறித்து மக்களும் இளைஞர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இந்த உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்பவர்கள் உண்மையான தலைவர்கள். உண்மையை உணர்ந்த மக்களே போராடுவார்கள். தமது விடுதலையை வென்றெடுப்பார்கள்!
மக்களுக்காக போராடுபவன் தலைவன்

மக்களை திரட்டி போராட முற்படுபவன் புரட்சியாளன்.. மக்களுக்கு தான் யாரென்று உணர்த்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.. யாரை நீங்கள் அடிமை என்று கருதுகிறீர்களோ அவனிடம் அவன் ஒரு அடிமை என்பதை உணர்த்தி விடுங்கள் பின்னர் அவன் தன் வழியில் போராட தொடங்குவான்.

இருக்கின்ற சூழலில் உருவாகியுள்ள கட்டமைப்பில் இருந்துதான் முதல் அடியை எடுத்து வைக்க முடியும் தேவைதான் எல்லாவற்றையும் தொடங்கி வைக்கிறது
முடியாது என்ற சொல்லே முடியும் என்பதின் எதிர்பதமே தவிர அதுவே முற்று பெரும் சொல் அல்ல

எல்லாம் ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல பெரும் கனவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் இளைஞர்கள் எழுக தமிழ் எழுச்சியோடு. இலட்சியத்தை நோக்கி தூவப்பட்ட விதைகளும் வீரியத்துடன் முளை விடத் தொடங்கி விட்டன.

அறுவடைக்கான காலம் வரும்..
மாற்றம் ஒன்றே மாறாதது.
மனங்கள் மாறவேண்டும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்