சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.முதல் குற்றவாளி என்ற பிறகும் தூக்கி கொண்டாடும் சமூகம்.. சீமான் வேதனை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகும், இந்த சமூகம் அவரை இன்னும் கொண்டாடுவது ஏன்? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைகோட்டுதயத்தை ஆதரித்து சீமான் பேசியபோது அவர் ஜெயலலிதா குறித்து பேசிய விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில், தனி மனித அபிமானங்களை கைவிடுங்கள். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஏ1 குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே தெரிவித்து விட்டது.

மொத்தம் 570 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஜெயலலிதாவின் பெயர் 350-க்கும் மேற்பட்ட பக்கங்களில் இருந்தது. ஆனாலும் அவரது புகைப்படத்தை இன்னும் சட்டைப் பையில் வைத்து பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வைத்திருந்ததே திட்டமிட்டு கொள்ளையடிக்கத்தான் என்று தீர்ப்பில் எழுதியிருந்தது.

இதை யாராவது மறுக்க முடியுமா. எத்தனை லட்சக்கணக்கான கோடிகளை பதுக்கி வைத்திருக்கிறார்கள் தெரியுமா. ஊடகங்கள் பெருத்து போய் விட்டது. இதனால் எல்லாருக்கும் செய்தி பசி. எனவே கமல் இரவோடு இரவாக டுவிட்டரில் போடும் செய்திகளை மறுநாள் தலைப்பு செய்தி போல் கூறி நம் தூக்கத்தை கலைத்து இந்த ஊடகங்கள் எழுப்பி விடுகின்றன. எப்ப கமல் கூறினார் என்று போய் பார்த்தால் அவர் டுவிட்டரில் போட்டிருக்கும் செய்தியாக அது உள்ளது.

ரஜினி ரசிகர்களைத்தான் சந்திப்பார். ஆர்கே நகர் மக்களையோ மீனவர்களையோ சந்திப்பாரா என்ன. இதெல்லாம் செய்தியா. ரஜினி, கமல், விஜய் , விஷால் இவங்களெல்லாம் அரசியலுக்கு வரனும்னு கோரிக்கை வைக்கிறார்கள். இவங்களெல்லாம் வந்துட்டா நாங்களெல்லாம் தெருவுல போகனுமா.

திரைப்படத்தில் நடிப்பது அந்த புகழ் வெளிச்சம் மட்டுமே நாட்டை ஆள தகுதியானதாக இருக்குமா. கேளிக்கையிலும் பொழுது போக்கிலும் அதிகம் நாட்ட கொண்ட மக்களை ஒரு போதும் புரட்சி செய்ய வைக்க முடியாது என்று சீமான் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்