இராஜதந்திரச் சிக்கலில் இலங்கை! இந்தியாவை சீண்டும் தேசியக் கொடி!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர முறுகல் நிலையொன்றை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதன்முறையாக கடந்த முதலாம் திகதிமுதல் அங்கு சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கையின் தேசியக் கொடியும், துறைமுக அதிகாரசபையின் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தன.

ஏனைய கொடிகளைவிட, இலங்கையின் தேசியக்கொடி சற்று உயரமாகப் பறக்கவிடப்பட்டிருந்தது. பின்னர் இலங்கையின் தேசியக்கொடி ஏற்றப்பட்ட கம்பத்தின் உயரம் குறைக்கப்பட்டு சீனாவின் தேசியக்கொடிக்கு சமமாக கீழ் இறக்கப்பட்டது.

சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள விடயம் புதுடில்லிக்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த விசனம் இராஜதந்திர ரீதியில் கொழும்புக்கு தெரிவிக்கப்படுமென கொழும்பிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவத் தேவைகளுக்கு சீனாவால் பயன்படுத்தக் கூடாதென முன்னர் இந்தியா இலங்கை அரசிடம் இராஜதந்திர மட்டத்தில் வேண்டுகோளொன்றை விடுத்திருந்தது.

அதற்கு சீனாவும் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், சீனாவின் தேசியக் கொடிக்கு ஹம்பாந்தோட்டையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது சீனாவின் ஆதிக்கத்தின் ஆரம்பமென கருதும் இந்தியா, அதன் காரணமாகவே தனது எதிர்ப்பை தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்