70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகள் 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக் கு வழங்கும் ஆணையாகவே அது அமையும். அந்த ஆணை தமிழ் மக்களின் அழிவுக்கான அடித்தளமாகவும் அமையும். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக் கிறார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இடைக்கால அறிக்கையில் மிக தெளிவாக ஒற்றையாட்சி என்பது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒற்றையாட்சி என்பதற்கான அடிப்படை இறமை பகிரப்பட முடியாது. அதேவேளை சமஷ்டிக்கான அடிப்படை இறமை பகிரப்பட கூடியது. ஆகவே இடைக்கால அறிக்கையில் 1ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இறமை பகிரப்பட முடியாததும், பாரதீனப்படுத்தப்பட முடியாததும் என்று. பின்னர் எப்படி சமஷ்டிக்கான உள்ளடக்கம் இடைக்கால அறிக்கையில் உள்ளது என்பது பெரிய கேள்வி. இதனை நான் சுமந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்கிறார் நாங்கள் இறமையை பகிருமாறு கேட்கவில்லை. பிரிக்குமாறே கேட்கிறோமாம். பகிர்வதற்கும், பிரிப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

இதே சுமந்திரன் பின்னர் கூறுகிறார் நாங்கள் இறமையை பகிர்வதை பற்றி கேட்கவில்லை. அதிகாரங்களை பகிர்வதை பற்றியே கேட்கிறோம் என. இப்படிப்பட்ட அரசியல் மோசடிகளை செய்து கொண்டு 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு இன்றைக்கு உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக ஆணை கேட்கிறார்கள்.

பிரித்தானியர்கள் வெளியேறிய பின்னர் உருவான இலங்கையின் 1வது அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பை எதிர்த்து 50ற்கு 50 கேட்டேம். பின்னர் 1970ம் ஆண்டு வந்த 2வது அரசியலமைப்பை தமிழரசு கட்சி எதிர்த்தது. 1978ல் வந்த 3வது அரசியலமைப்பை தமிழர் விடுதலை கூட்டணி எதிர்த்தது. இப்படி தமிழர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒற்றையாட்சியை எதிர்த்தார்கள்.

போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தேசிய தலைவர் வே.பிரபாகரனிடம் சர்வதேச நாடுகள் கேட்கின்றன ஒற்றையாட்சிக்கு இணங்குங்கள் நாங்கள் போரை நிறைவுக்கு கொண்டுவருகிறோம், பின்னர் உங்களை ஒரு பெரிய தலைவராகவும் நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று. அப்போதும் தலைவர் அதனை நிராகரித்தார்.

ஒற்றையாட்சியானால் வெறுப்படைந்தே நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தேன். இப்போது நான் ஒற்றையாட்சிக்கு இணங்குவது தமிழர்களை அழிப்பதற்கு நானே ஒப்புதல் வழங்குவதற்கு நிகரானது என தேசியத் தலைவர் பிரபாகரன் கூறினார். அப்படிப்பட்ட தலைவன் வாழ்ந்த மண்ணில், அப்படிப்பட்ட தலைவன் நடத்திய போரில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த மண்ணில், அவர்கள் மடிந்த மண்ணில் இன்றைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி போன்றவர்கள் ஒற்றையாட்சிக்கு மக்களிடம் ஆணை கேட்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கினால் 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு, 70 வருடங்களாக தியாகங்களை செய்து, உயிர்களை தியாகங்கள் செய்து காட்டிய எதிர்ப்புக்கு மாறான ஒன்றாகவே இருக்கும். மேலும் தமிழ் மக்களின் அழிவுக்கான அத்திவாரமாகவும் அது இருக்கும். மேலும் தேர்தல் அறிவிக்கும் வரை 13ம் திருத்தச்சட்டத்தையும், அதன் கீ ழான மாகாணசபைகள் முறமையினையும் தீர்வாக ஏற்கவேண்டும் என சொன்னவர்கள்.

சுயநிர்ணய உரிமை ஒரு பகல் கனவு என சொன்னவர்கள் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது, ஒற்றையாட்சியை நிராகரிக்கவேண்டும் என சொல்கிறார்கள். இதற்கு பெயர்தான் சந்தர்ப்பவாதம். இவர்களையும் மக்கள் நிராகரிக்கவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் பொறாமை கொண்டு அவர்களை விமர்சிக்கவில்லை. இப்போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஊழல்கள் நடப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் அதனை விமர்சிக்கவில்லை. நாங்கள் கொள்கைக்கு மாறான அவர்களுடைய செயற்பாட்டையே விமர்சிக்கிறோம். 2010ம் ஆண்டு தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.

ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது, போரின் இறுதியில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கோராமல் வெறும் ஆட்சி மாற்றத்தையே கோருகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டினோம். அவை இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோரி நின்றபோதும் அது உள்ளக விசாரணையுடன் நின்றுவிட்டது.

மஹிந்த ராஜபக்ஷவும், இலங்கை இராணுவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்