யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை! 



பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்ததை சபேஸ்ராஜ் சத்தியமூர்த்தி என்ற முன்னாள் போராளி படம் பிடித்து வெளியிட்டது தொடர்ந்து, அவர்மீது சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தனர்.

இந்த சட்ட நடவடிக்கைகளை வழிநடத்தும் சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோர் முதல்கட்டமாக, பொலீஸ் நிலையங்களில் செய்யப்பட்ட 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் அடிப்படையில், Westminister Magistrate Court இல் கிரிமினல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, பிடியாணைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதன் விளைவாக, பிரிகேடியர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். 

ஆனால், ஜனாதிபதி மைத்திரியால் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை அருண்கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் முடுக்கி விட்டிருந்தனர். அதன் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உட்பட, பல்வேறு அமைப்புக்களை ஒருங்கிணைந்து, பிரித்தானிய பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் பொதுநலவாய அமைச்சு ஆகியோருக்கு விண்ணப்பம் ஒன்றை நேற்று சமர்ப்பித்து இருந்தனர்.

அந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர பாதுகாப்பு விலக்கப்பட வேண்டும் என்றும், போர்க்குற்றம் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட மீளாய்வு (JR) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார். 

British Tamil Conservatives (BTC) British Tamils Forum (BTF) Global Tamil Forum (GTF) International Centre for the Prevention and Prosecution of Genocide (ICPPG) Tamils Coordinating Committee (UK) Tamils for Labour Tamil Friends of the Liberal Democrats Transnational Government of Tamil Eelam (TGTE) Tamil Solidarity (TS) Tamil Youth Organization (TYO) Tamil National Alliance UK (TNA UK) Tamil Information Centre (TIC) World Tamils Historical Society (WTHS) போன்ற 13 அமைப்புக்கள் கையெழுத்து இட்டிருந்தன. இதன் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் அந்த இராணுவ அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் பிரித்தானியாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று, தமிழர் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் இடம்பெற்றது. இந்த மாபெரும் எதிரப்புப் பேரணியில் முதல் முறையாய் பல்வேறு அமைப்புகள் ஒருமித்த குரலாய் ஒன்றுதிரண்டர். ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், தமிழரின் ஒருமித்த பலத்தை நிரூபித்தனர்.

இந்த ஒன்றுபட்ட செயற்பாடானது, புலம்பெயர் அமைப்புக்கள் மீது இருந்த நம்பிக்கையீனத்தை போக்கி, தமிழர் பலத்தை மீண்டும் ஒருங்கிணைந்து பெரும் நம்பிக்கையை ஏற்படுதியுள்ளது. இந்த பெரும் ஒன்றிணைவுக்காக கடுமையாக பாடுபட்டு, பிரித்தானிய புலம்பெயர் அமைப்புக்களை முதல் தடவையாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்த பெருமை சிரேஸ்ட சட்டத்தரணி அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோரையே சாரும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்