கூட்டமைப்பு தற்கொலைக்கு முயல்கின்றதா?

தோல்வியிலும் பின்னடைவிலும் பாடம் படிக்காதவன், பட்டறி வைப் பயன்படுத்தத் தெரியாதவன், முன்னேறப் போவதில்லை.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்களின் பிரதிபலிக்கப்பட்ட மனப்போக்கை தமிழ்க் கூட்டமைப்பு உணரவில்லையோ, உணரத் தலைப்படவில்லையோ என்பது புரியவில்லை.

மக்கள் அளித்த தீர்ப்பு தெளிவானது. முன்னைய தேர்தல்களில் ஏறத்தாழ ஏகமனதாகக் கூட்டமைப்புக்கு பின்னால் நின்ற மக்கள் இன்று அதிலிருந்து கலைந்து போகத் தலைப்பட்டு விட்டார்கள்.

வடக்கு, கிழக்கில் இத்தனை தமிழ் எம்.பிக்களில் இத்தனை பேர் நாங்கள் என்று இதுவரை காலமும் பீற்றியடித்த கூட்டமைப்புப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இனி வாக்கு விகிதாசாரம் பற்றிக் கூடப் பேச முடியாது. வடக்கில் மூன்றில் ஒரு பங்கு வீதத்துக்கு வாக்கு வங்கி சரிந்து விட்டது. ஏகப் பிரதிநிதித்துவம் பறந்து விட் டது. ஏறத்தாழ எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் தனித்து ஆகக் கூடிய உறுப்பினர்களை பெற்றுள்ளோம் என்று கூறுவது கூட்டமைப்புக்கு வெற்றியல்ல பெரும் தோல்வியே.

கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் ஐயாவிலிருந்து எவருமே இந்தப் பின்னடைவு குறித்து அலட்டிக் கொண்டவர்களாகத் தெரியவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகளை வெற்றி என்பது போலக்காட்டும் அவர்களின் கருத்து வெளிப்பாடும், செயல்போக்கும் பட்டறிவு பட்டுத் தெளிந்தவர்களாகத் தோற்றவில்லை.
யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட்தான் என்று அறிவிக் கப்பட்டிருக்கின்றது. எவ்வளவு தூரம் இது யாழ். மாநகர சபையின் செயற்பாட்டுக்கு சாதகமானது, சாத்தியமானது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

38 பேர் கொண்ட வடக்கு மாகாண சபையை முப்பது பேரோடு முதல்வர் விக்னேஸ்வரனிடம் கையளித்தவர்கள் வடக்கு மக்கள். அத்தகைய பெரும்பான்மையோடு நிர்வாகத்துக்கு வந்த நீதியர சரை அமைதியாக சபையை நடத்த விடாமல் ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்ற நிலையில் தள்ளாடும் நிலைக்கு தள்ளிய பிரகிருதிகளில் பிரதானமானவர் ஆனோல்ட். அவர் இன்று 45 பேர் கொண்ட மாநகரசபையை, ஆக 17 பேரின் பின்னணியுடன் (அதில் கூட எத்தனை பேர், ஆனோல்ட் மாகாண சபையில் செய்தமை போல ‘ஸேம் சைட்’ கோல் அடிக்கக் கூடியவர்களோ தெரிய வில்லை) பொறுப்பேற்கப் போகின்றார், எப்படி சபை செயற்படப் போகின்றது என்பதற்குக் காலம் பதில் கூறும்.

இந்தத் தேர்தல் ஒரு புறம் தமிழ்க் கூட்டமைப்புக்கு பேரிடியாக பேரடியாக வந்து விழுந்த அதேசமயம், மாற்றுக் கட்சிகளுக்கு பெரும் ஊக்க சக்தியாகவும் அமைந்திருப்பது கண்கூடு.
கூட்டமைப்புத் தலைவர்கள் சிலரின் ஆணவப் போக்கான திமிர்த்தனமான செருக்கு மிக்க அரசியல் செயற்பாடுகளும், கருத்து வெளிப்பாடுகளுமே இந்த மோசமான நிலைமை உருவான மைக்கான காரணங்களில் பிரதானமானவை என்பதை சாதாரண மக்களே உய்த்துணர்ந்து பேசும்போது, அது தெரியாதவர்கள் போல கூட்டமைப்புத் தலைவர்கள் இன்னும் செயற்படுகின்றமைதான் ஆச்சரியமானது.
‘சத்தமில்லாத பெரும்பான்மை’ (Silent Majority) தங்களுடன் என்று மார்தட்டியவர்கள் இன்று சத்தம் சந்தடியில்லாமல் மக் கள் வழங்கிய தீர்ப்பை இன்னும் புரிந்து கொள்ளாமல் நடப்பது அல்லது அப்படிப் புரிந்து கொள்ளாமல் நடிப்பது ஆச்சரியத்
திற்குரியதுதான்.

பெரும் பின்னடைவு நிலைக்கு தோல்விக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கின்றது என்பதே இத்தேர்தல் முடிவுகள் தரும் பாடம். மாற்றுச் சக்திகளை மக்கள் நாடத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதற்கான தெளிவான காட்டி இந்தத் தேர்தல் பெறுகள்.

இந்தப் பின்னடைவு நிலையிலிருந்து கூட்டமைப்பை மீட்ப தாயின் அது பின்னடைவு நிலை என்பதை முதலில் ஒப்புக் கொண்டு, அதனை ஏற்க வேண்டும்.
வடக்கில் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பை இந்த நிலை மைக்கு மோசமாக வழி நடத்திச் சென்றவர்கள் சென்று கொண் டிருப்பவர்கள் முதலில் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். கட்சியை இந்த மோசமான நிலைக்குக் கொண்டு சென்றவர்கள் முதலில் அதற்காகப் பொறுப்புகளை தார்மீக ரீதியில் தன்னும் ஏற்றுக் கொண்டு கட்சிப் பொறுப்பிலிருந்து நீங்கி, அதனை அறிவிக்க வேண்டும்.

தமிழர்கள் மத்தியில் மற்றொரு பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் முதல்வர் சி.வீ.விக்னேஸ்வரனைக் கூட்டமைப்பிலிருந்து தள்ளி வைப்பதற்கு இனியும் முயற்சிப்பது, கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை தற் கொலைக்கு ஒப்பான வேலையாகும். அது, இன்று கொல்லும் தற்கொலையாக இல்லாவிடினும், நின்று கொல்லும் தற்கொலையாகி விடும் என்பதைக் கூட்டமைப்புத் தலைமை உணர வேண்டும்.
அவரையும் கூட்டமைப்புத் தலைமைக்குள் முறையாக உள்வாங்கி, கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கு சேத நிவிர்த்தி (Damage Clearings) செய்வதாயின் அதன் தலைவர் சம்பந்தன், அதன் விடயங்களில் சிலரைத் தள்ளிவைக்கவும் முன்வரவேண்டும்.
கூட்டமைப்பின் தமிழரின் பின்னடைவை அல்லது தோல் வியை ஒப்புக்கொள்ளுதல், அதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பிலிருந்து தாமாக விலகுதல், நீதியரசர் விக்னேஸ்வரனை, அருந்தவபாலன் போன்றோரை மீண் டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு இதய சுத்தியுடன் விரைந்து நடவடிக்கை எடுத்தல் இந்த மூன்றையும் செய்யத் தவறினால் தலைவர் பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட பெருமையுடை யது எனத் தாங்கள் புகழ்ந்துரைக்கும் தமிழ்க் கூட்டமைபையும்

தந்தை செல்வாவினால் ஸ்தாபிக்கப்பட்டது எனத் தாம் பீற்றிக் கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும்
நிரந்தரமாகப் பின்னடைவுக்குள் தள்ளிய பணியை உறுதிப் படுதியவர்கள் ஆவீர்கள்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்