யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது. யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னைநாள் பொறுப்பாளர் மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்திறன் போட்டிகள் யேர்மனியில் தமிழர்கள் மத்தியில் ஒரு திருவிழாவைப்போல் நடைபெறுவது மகத்தான விடயமாகும்.

இப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பு வெள்ளிவிழா அகவையைச் சிறப்பான முறையில் பொறுப்பில் உள்ளவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கொண்டாடினார்கள். இதில் சிறப்பாக இதுவரைகாலமும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டிகளில் சிறுவயதிலிருந்து பங்குபற்றி மிகக்கூடுதலான பரிசில்களைப் பெற்றுக்கொண்ட திருமதி யெனீவன் உமா அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றினார். இவர் ஆற்றிய உரையிலிருந்து யேர்மனியின் தமிழ் நிருபிக்கப்பட்டது. அத்துடன் அசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் அவரை உரிமையுடன் வரிசையாக வந்து வாழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களுக்குப் பின் தமிழ்த்திறன் போட்டியை மிகச் சிறப்பாக முன்நகர்த்தி அதில் பல இளையவர்களை இணைத்து, புதிய பொறிமுறைகளைப் புகுத்தி, போட்டிகளை ஆவனரீதியாக அடையாளப்படுத்தி, போட்டிகள் சார்ந்து ஆசிரியர்களுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்து, தமிழ்த்திறன் போட்டியை மிகச்சிறப்பாக செயற்படுத்திக் கொண்டிருக்கும் திரு. இராஐ மனோகரன் அவர்களுக்கு அந்த மேடையில் வைத்து தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களால் வாழ்த்துக்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் மாநிலரீதியாகப் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களில் 417 மாணவர்கள் 651 போட்டிகளில் பங்குபற்றினார்கள். இப்போட்டிகளில் யேர்மனி முழுவதிலும் உள்ள ஆசிரியர்களில் பயிற்சிபெற்ற 80 ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். அத்தோடு யேர்மனியில் பிறந்து பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவுசெய்து ஆசிரியர்களாகப் பணியாற்றும் இளையவர்களில் 12 பேர் பயிற்சி நடுவர்களாகப் பணியாற்றி பயிற்சி பெற்றார்கள். இவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் இளையவர்களுமாக 65 பேர் செயற்பாட்டாளர்களாகச் செயற்பட்டு போட்டிகளை மிகச்சிறப்பாக நடாத்தினார்கள்.

இதன்போது சிறப்புப் போட்டிகள் அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்துக்கொண்டது. போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு நடுவர்களால் கொடுக்கப்படும் தலையங்கத்தின்கீள் பேச்சு, கவிதை,கட்டுரை, என பல போட்டிகள் நிகழ்ந்தன. இப்போட்டிகளில் மாணவர்கள் முன்றியடித்துக்கொண்டு பங்குபெற்றது வியப்பைத் தந்தது மட்டுமன்றி யேர்மனியின் தமிழ் ஆர்வமும் அதன் பற்றும், அதற்காகப் பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் மன நிறைவைத்தந்தது. நேரம் போதாமையினால் இப்போட்டிகளில் பங்குபெற வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது வேதனையைத் தந்தாலும் பெருமிதத்தை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் இப்போட்டிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்கவேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்