தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு!

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தன்னார்வ அடிப்படையில் தமது தாயகத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும், நாடு திரும்புபவர்களுக்கு வசதியாக தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளது.

இது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், கப்பல்துறை பணியகம் மற்றும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் இது தொடர்பான ஒரு கூட்டம் நடைபெறவிருந்தது. எனினும், அரசியல் குழப்பங்களால் இந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் குடியேற விரும்பும் அகதிகள் தொடர்பான அறிக்கையுடன் மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 2016ஆம் ஆண்டில் தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், அவர்கள் தம்முடன் தமது உடமைகளையும் கொண்டுசெல்லவே விரும்புகின்றனர்.

தாம் திரும்பும் போது, கப்பலில் தமது உடைமைகளை எடுத்துச் செல்லவே பெருமளவானோர் விரும்புகின்றனர் என்று வதிவிடமற்ற தமிழர்களின் புனர்வாழ்வு மற்றும் நலன்புரி ஆணையாளர் பி.உமாநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாத கணக்கின்படி, தமிழ்நாட்டில் 62,629 இலங்கை தமிழ் அகதிகள், 107 முகாம்களிலும், 36,794 பேர் முகாம்களுக்கு வெளியிலும் வசிக்கின்றனர் என்றும் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்