முஸ்லிம்களை மையப்படுத்தி இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சி! – ஹக்கீம் கடும் கண்டனம்

நாட்டின் முஸ்லிம் சமூகத்தைப் மையப்படுத்தி சில இனவாதக் குழுக்கள் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சாடியுள்ளார்.

கண்டி தெல்தெனிய மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் தற்போது பதற்ற சூழல் நிலவி வருகின்ற நிலையில், அமைச்சர் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள சகோதரர் ஒருவர் மரணித்துள்ள பின்னணியில், அதைக் காரணமாக கொண்டு முஸ்லிம்களை மையப்படுத்தி இனக்கலவரமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் இனவாத சக்திகள் அங்கு ஒன்றுசேர்ந்துள்ளன என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நிலைமையை நேரில் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சர் அங்கு விரைந்துள்ளார்.

இதேவேளை, சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொடர்புகொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்ததாக அமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும், சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உரிய வேளையில் களமிறக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டியில் உடன் அமுலக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு தொடர்ந்தும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்