அமரர் முனைவர் ம. நடராஜன் அவர்களின் இழப்பிற்கு ஐரோப்பித் தமிழர் ஒன்றியத்தின் இரங்கல் செய்தி

அமரர் முனைவர் ம.நடராஜன் சோழப்பேரரசு இராசராசசோழன் ஆண்ட பொன்னான பூமியிலே பிறப்பெடுத்து இன்று 75வது அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார். அவரின் வாழ்க்கைக் காலத்தில் அவர் தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய சேவை அளப்பெரியதொன்றாகப் பதியப்பட்டுள்ளது. தனது வாழ்நாட்கள் முழுவதும் தமிழுக்காகவும் தமிழ்மக்களுக்காகவும் செலவிட்டு இன்று தமிழ்மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப்பிடித்துள்ளார். எந்த அபிலாசைகளுக்கும் இடங்கொடாமல் மற்றவர்களின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு மெழுகுதிரியாகச் சுடர்விட்டவர். தஞ்சையூர் இராசராச மன்னன் எந்த அளவிற்கு தமிழ்வளரச்சிக்கு தன்னை அர்ப்பணித்தாரோ அந்த அளவிற்கு இவரும் அந்த மண்ணின் வாசனை மாறாமல் எமது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மக்களின் விடுதலைக்கும் குரல்கொடுத்து சர்வதேச அரங்கில் தமிழனின் உரிமை பற்றிய கருத்தை எடுத்துரைத்திருந்தார்.

தமிழ்நாட்டுச் சட்டஅவையில் தமிழ்மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புக்களுக்கு ஆதரவு திரட்டியிந்தார். அவற்றைவிட இன்றைய உலக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினைபற்றிப் பேசப்பட்டு வருகின்ற அதே சமயம் அவர்களின் ஆணிவேரைப் பிடுங்கியெறிய ஒருசாரர் கங்கணம் கட்டி நிற்கின்ற காலகட்டத்தில் தமிழனுக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலத்தை மூடிமறைக்க எத்தணிக்கும் சிங்கள அரசையும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களையும் நீதியின் முன் நிறுத்த அரும்பாடுபட்டார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழினப்படுகொலை என்பவை தொடர்பாக ஒரு அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றதுடன் தமிழ்மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் பற்றிய கருத்தையும் 2011ம் ஆண்டு செப்ரம்பர் 27ம் நாள் ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர மண்டபத்திலும் ஐரோப்பியப் பாராளுமன்றத்திலும் எடுத்துரைத்து, தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் தனது பணியை வரலாற்றில் பதிவு செய்திருந்தார்;. இத்தகவலை இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கும் தெரிவித்ததுடன் தமிழ் நாட்டு மக்களுக்கும் தனது புதியபாதை பத்திரிகையினூடாகத் தெரிவித்திந்தார். தமிழ்மக்கள் இனப்பிரச்சினை தொடர்பாக, மார்ச் 2011 இல் ஐ.நா அவை ஆங்கிலதில் வெளியிட்ட நிபுணர் குழு அறிக்கையை அனைத்துத் தமிழ்மக்களும் அறிந்துகொள்ளக் கூடிய விதத்தில் அதனை தமிழாக்கம் செய்து வெளியிட்டபெருமையும் முனைவர் அவர்களையே சாரும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் தமிழ்மன்னர்களின் வரலாற்றுப் பூமியில் தனது சொந்த நிலத்தில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் தமிழின அழிப்பின் அடையாளச் சின்னத்தைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வரலாற்றில் பதிவுசெய்வதற்கான முயற்சியில் சிறையும் சென்றிந்தார்.

இவ்வாறான ஒரு மகத்துவமான அற்புத மனிதனை தமிழ்நாடு பெற்றிருப்பதையும் அவரின் பணி தமிழ்சார்ந்து திகழ்ந்ததையும் இட்டு தமிழர்களாகிய நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

மதிப்புக்குரிய அமரர் முனைவர் ம. நடராஜன் அவர்களின் அரசியல் ஞானம் சமூகப்பணி, பொதுநலசேவை என்பவை தமிழுக்காகவே என்றும் இருந்து வந்திக்கிறது. அவரின் இழப்பு இன்று எமது மக்களின், மண்ணின் விடுதலைக்கு பேரிழப்பாகும். அவரின் ஆத்மா சாந்திக்காக வேண்டும் அதேவேளை அவரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்