விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி மீண்டும் போர்க்கொடி?

எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக க.வி.விக்னேஸ்வரனை நியமிக்க அனுமதிப்பதில்லையென தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர். கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் தமக்கிடையிலான அண்மைய சந்திப்புக்களில் இதுபற்றி பேசி, ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். தமது பேச்சையும் மீறி, விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டால், “சம்பந்தனின் பிடியில்“ இருந்து வெளியில் வருவதென்றும் முடிவெடுத்துள்ளனர்.

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த சில உள்சுற்று பேச்சுக்களின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, தமிழரசுக்கட்சியின் புதிய முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நியமிப்பதென்றும் முடிவெடுத்துள்ளனர்.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதை போல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கான முன்னாயத்தங்களில் மாவை சேனாதிராசா ஈடுபட்டுள்ளார். கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் இந்த முடிவையடுத்தே மாவை, முதலமைச்சர் வேட்பாளராகுவதற்கு தயாராக ஆரம்பித்துள்ளார்.

முக்கிய விடயத்தில் இறுதி முடிவெடுப்பவராக இதுவரை இரா.சம்பந்தனே இருந்து வந்துள்ளார். எனினும், இம்முறை விக்னேஸ்வரனிற்கு ஆதரவாக சம்பந்தன் முடிவெடுத்தால், அந்த முடிவை ஏற்றுக்கொள்வதில்லையென்றும் இதன்போது பேசப்பட்டுள்ளது. கூட்டமைப்பிற்கு வெளியில் வந்தாவது, அதை எதிர்ப்பதென சில உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர். அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க போகிறேன் என தமிழரசுக்கட்சியின் முடிவெடுக்கும் மட்டத்தில் உள்ள தலைவர்கள் அனைவரிடமும் மாவை சேனாதிராசா நேரடியாக கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்