10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்

தாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

முன்னதாக, நம்பிக்கையில்லா பிரேரரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது, 10 அம்ச கோரிக்கையை கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமரிடம் கையளித்திருந்ததுடன், இதற்கு எழுத்துமூல உறுதிமொழி தந்தால், பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 10 அம்ச கோரிக்கையை முன்வைத்த போது, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும், அதன் பின்னர் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளாவன.

1) வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண்பது.
2) அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.
3) பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக விலக வேண்டும்.
4) அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.
5) போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.
6) வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
7) வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
8) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்காதவர்களுக்கு இந்த மாகாணங்களில் நியமனங்கள் வழக்கப்படக் கூடாது.
9) வடக்கு, கிழக்கின் 8 மாகாணங்களுக்கும் மாவட்டச் செயலர்களாக தமிழர்களை நியமிக்க வேண்டும்.
10) வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இரண்டு மாகாணசபைகளுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.

ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்