ஜெயலலிதாவின் மொத்த வீட்டையும் நினைவிடமாக மாற்றமுடியாது – வழக்கறிஞர்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தின் வீடு நினைவிடமாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை அறிவித்ததையடுத்து அது ஒரு விவாதப்பொருளாகவே மாறியிருக்கிறது.

அந்த சொத்து ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பெயரில் இருப்பதால் அது பேரன், பேத்திகளுக்கே சொந்தம் என்ற வகையில், அதை நினைவிடம் ஆக்கும் முன் எங்களைக் கேட்க வேண்டும் என முதல்வருக்கு ஜெ.,வின் அண்ணன் மகன் தீபக் கடிதம் எழுதியுள்ளார்.

அதேசமயம், சட்டப்படி அந்த வீடு யாருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு அது நினைவிடமாக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இதுபற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பதிலளித்த வழக்கறிஞர் சரவணன், “ஒரு கட்சித் தலைவர் இறந்ததற்குப் பிறகு அந்த வீட்டை நினைவிடமாக்கவேண்டும் என்றால் முதலில், இறப்பதற்கு முன் அவர் ஏதும் உயில் எழுதி வைத்திருக்கிறாரா என்று பார்க்கவேண்டும். அடுத்து, குறிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டைப் பொறுத்து அதில் ஒரு பகுதி 1991 ம் ஆண்டுக்கு முன் வாங்கியது. 1991 ம் ஆண்டிற்குப் பிறகு ஜெயலலிதா வாங்கிய அதே வீட்டின் மற்றொரு பகுதி சொத்துக் குவிப்பு வழக்கிற்க்காக அட்டாச் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியை நினைவிடமாக்கமுடியாது. ஆனால் 1991 க்கு முன்னர் வாங்கிய பகுதியை அதன் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதியோடு நினைவிடமாக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போயஸ் தோட்ட வீட்டைக் காவல்துறை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது, பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்