தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து மோடியுடன் ரகசிய உடன்பாடு – வைகோ

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்-அமைச்சரும் போராடியதில்லை என வைகோ கூறினார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் அமையவுள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்துள்ளேன்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8-ந்தேதிகளில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அமைச்சர் அனந்தகுமார் தலைமையில் சதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் அந்த மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக சுற்றுச்சூழல் தரமாட்டோம் என்றும் ஆனால் நீங்கள் அணையை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பின்னர்தான் ரூ.5,912 கோடி ஒதுக்கப்பட்டு அணை கட்டுவதற்கான பொருட்களையும் அந்த பகுதிக்கு கொண்டு சென்று தற்போது அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அணை பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அணை கட்டுவதை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வாதத்தின்போது தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சேகர்ராப்தே என்பவரும் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை ஆமோதித்துள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியமே அமைக்க முன்வரவில்லை. அப்படியிருக்கும்போது கண்காணிப்பு ஆணையம் அமைப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க போவதில்லை.

மேகதாதுவில் அணை கட்டினால் 48 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு தேக்கி வைக்க முடியும். அதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வராது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தங்கள் மாநிலத்தில் 3½ லட்சம் ஏக்கர் பாசன பகுதியை அதிகரித்துள்ளது. மேலும் 30 ஆயிரம் ஏரிகளையும் உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன் 5 மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்.

இந்த பிரச்சனைகளுக்கு இடையே தற்போது தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. பல முறை பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அந்த சமயங்களில் எல்லாம் மேகதாது அணை பிரச்சனையில் கடுமையான எதிர்ப்பை காட்டக்கூடாது என மோடி எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார்.

எனவே மோடி, எடப்பாடி பழனிசாமி இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்- அமைச்சரும் போராடியதில்லை.

ஒவ்வொரு முறையும் முல்லைப்பெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்ப்பை அவர் பெற்றுத்தந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்துள்ளார். இந்த வி‌ஷயத்தில் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டு குற்றவாளிகள் ஆவர்.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். போலீசார் அனுமதி தர மறுத்தாலும் தடையை மீறி தொண்டர்களுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்