“மே-18” கூடி அழுவதற்கான துக்கநாள் அல்ல, ஒன்று கூடி எழுவதற்கான எழுச்சி நாளாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

சிங்கள பௌத்த பேரினவாத பேய்களால் திட்டமிட்ட இனவழிப்பு செயற்திட்டத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகள் தமது உயிர் துறந்து உரிமைப்போரிற்கான விதையாகியுள்ளார்கள். ஆயுத மௌனிப்பின் முடிவுப்புள்ளியாகவும், தொடக்கப்புள்ளியாகவும் அமைந்துவிட்ட இத்தியாகமே விடுதலைத் தேரை தொடர்ந்தும் முன்னகர்த்திச் செல்வதற்கான உந்துவிசையாக இருந்து வருகின்றது.

அரசியல் மற்றும் ஆயுத வழிமுறைகளினூடே அறுபது ஆண்டுகளாக முன்னெடுத்து வரப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டமானது இன்று இராசதந்திர வழிமுறையிலான அறவழிப் போராட்டமாகத் தொடர்வதற்கான ஆரம்பப்புள்ளியாகவும் அடிப்படை ஆதாரமாகவும் முள்ளிவாய்க்கால் பேரவலம் அமைந்துள்ளது. ஆயுத மௌனிப்பின் பின்னணியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதி நாட்களில் மாத்திரம் சுமார் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்று பிணமாகவும், காயப்படுத்தப்பட்டு அரைகுறை உயிருடனும் புதைக்கப்பட்ட கொடூரம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. நான்காம் கட்ட ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் வன்னி மண்ணில் வாழ்ந்திருந்த 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான பொறுப்புக்கூறப்படாது ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டது.

இனியும் காத்திருக்கவோ, காலம் தாழ்த்தவோ முடியாது. அவ்வாறு செய்வோமாயின் முள்ளிவாய்க்கால் மண்ணை இரத்த சகதியாக்கி விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எமது உறவுகளுக்கு செய்யும் பெருந்துரோகமாகும். மன்னாரில் ஆரம்பித்த நான்காம் கட்ட ஈழப்போராட்டத்தின் பயணப்பாதை 2009 மே-18 இல் முள்ளிவாய்க்காலில் போராட்டத்தின் செல்திசை நோக்கி நகர்ந்து சென்ற நான்கரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் ஆணித்தரமாக ஒரு விடயத்தை முரசறைந்திருந்தார்கள்.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத் தனியரசு நோக்கிய விடுதலைப் போராட்டமே தமது பாதுகாப்பரண் என்பதை நொடிக்கு நொடி மரணம் துரத்திய போதிலும் அதனை எதிர்கொண்டவாறு முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்து சென்று சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடித்துரைத்திருந்தார்கள். கந்தக நெடிகளை விஞ்சியெழுந்த மரணத்தின் நெடியை நாசித்துவாரத்திற்கு அண்மித்ததாக உணர்ந்த போதிலும் விடுதலைப் போராட்டத்தின் செல்திசைக்கு நேர் எதிர்த் திசை நோக்கி எவரும் அடியெடுத்து வைத்திருக்கவில்லை.

உடமைகளுடனும், உறவுகளுடனும் ஆரம்பித்திருந்த இடப்பெயர்வு அவலம் உடமைகளை கைவிட்டு உறவுகளுடன் தொடர்ந்தமையும், உடனழைத்துச் சென்ற உறவுகள் பிணங்களாகச் சரிந்து விழுந்த போது உயிர் மட்டும் ஒட்டிய உடல்கூட்டுடன் நகர்ந்த கொடுமையுமாக பெரும் இன்னல்கள் நிறைந்ததாக அமைந்திருந்த இடப்பெயர்வு எந்தவொரு கட்டத்திலும் விடுதலை போராட்டத்திற்கு எதிரான திசை நோக்கியதாக வழிமாறியிருக்கவில்லை. அவ்வாறு பெரும் உயிர்விலை கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பின் அணிவகுத்துச் சென்றதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாண்பினை உலகறியச் செய்தனர்.

அவர்களின் அத்தியாகத்தின் கால் தூசளவேனும் நாம் செய்துள்ளோமா என்பதை உலகத் தமிழர்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆயுத மௌனிப்பின் பின்னர் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அரசியல் ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் தார்மீக ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணமாமது தமிழர் விரோத நிலைப்பாட்டின் அடிப்படையில் உச்சம்தொட்டு நிற்கின்றது. தமிழினப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல் விடயம் ஒன்றுதான் அதனை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, அரச படைகள் மற்றும் அத்தனைக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்ற அனைத்துலக சமூகத்தினரையும் நீதியின் முன்னிறுத்தும் துரும்புச் சீட்டாகும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த அதிகாரத்தை தம்வசமாக்கியுள்ளவர்கள் இப்பொறுப்புக்கூறல் விடயத்தை பேச்சளவில் மட்டும் முன்னிறுத்தி தம்மை வலுப்படுப்படுத்திக் கொண்டுள்ளமையானது மாபெரும் துரோகமாகும். நடந்த தமிழினப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலை கைவிட்டே பதவி, சுகங்களை வானாளாவிய அளவுக்கு அனுபவித்துக் கொண்டுள்ளார்கள் இவர்கள். இச்செயற்பாடானது தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவத்தை மறுவாசிப்பிற்குள்ளாக்கியுள்ளதை கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தாயகத்தில் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களும் இழுபறிநிலையும் உலகத் தமிழர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான துரும்புச் சீட்டாக உள்ள தமிழினப்படுகொலை நாளைக் கூட நினைவேந்துவதற்கும் அதன் அடிப்படையில் தமிழர்களின் வேணவாவினை உலகறியச் செய்யவும் வலுவான ஏற்பாடுகளைச் செய்ய முடியாதளவிற்கு பலவீனமான நிலையில் தாயக அரசியல் தளம் இருப்பதானது துர்ப்பாக்கியமாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து வரும் வடக்கு மாகாண சபையின் ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளே இந்த குழப்ப நிலைக்கு வித்திட்டுள்ளது. இவை உடனடியாக சீர்செய்யப்பட்டு எக்காலத்திலும் நினவேந்தல் நிகழ்வின் மாண்பினை சிதைவுக்குள்ளாக்காது முன்னெடுக்கும் வகையில் குழுவொன்று ஏற்படுத்தப்படுவதே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படாதிருக்கவும் ஒரே தலைமையின் கீழ் நேர் சீராக நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கவும் வழியேற்படுத்தும்.

சாதி, மத, பிரதேச, பால் ஒடுக்குமுறைகள் மனித உரிமைகள் விழுமியங்களுக்கு முரணானவை அத்துடன் தமிழ்த் தேசியத்தை அகரீதியாக பலவீனப்படுத்துபவை. தமிழ் மக்கள் ஓரு தேசமாக ஒன்றிணைவதைத் தடுப்பவை. தமிழ்த் தேசியத்தை ஒரு வாழ்வு முறையாக மாற்றுவதன் மூலமும் மனித உரிமை விழுமியங்களை கடைப்பிடிப்பதன் மூலமும் இவ் ஒடுக்குமுறைக்களை இல்லாதொழிக்க முடியும். அதற்கான ஏது நிலையை மே-18 நினைவேந்தல் ஒன்று கூடல் மூலம் உருவாக்குவோம். தமிழின அழிப்பு நாளை உலகத் தமிழர்கள் ஒன்ற்பட்டு ஒரே குரலாக நினைவேந்துவதன் மூலம் கீழ்வரும் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க முடியும். ஒன்றுபட்ட மக்கள் பங்கேற்பின் மூலம் இப்பிரகடனங்கள் வலிமையாக முன்வைக்கப்பட்டு எதுவித சமரசமும் இன்றி அடைந்தேயாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

1. சிறிலங்காவினால் ஈழத்தமிழர்களுக்கெதிராக எழுபது ஆண்டுகளாக கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பு, அரச நீதித்துறைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் அப்பாற்பட்டு, ஐநாவின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்கப் பட வேண்டும்.

2. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

3. குர்திஸ்தான் மற்றும் கதலோனியாவில் நடைபெற்றது போன்ற வாக்கெடுப்பு, யாப்பின் 6ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு, வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும், இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் ஈழத்தமிழரிடையேயும் (ஏனெனில் அவர்கள் தங்கள் விருப்புக்கெதிராக வலோத்காரமாக நாட்டிலிருந்து துரத்தப்பட்டவர்கள் என்பதினால்) தமிழ் மக்களின் வேணவாவைக் கண்டறிய ஐநாவின் தலைமையில் சர்வசனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

4. ஈழத்தமிழர் வரலாற்றுரீதியாக தமக்கே உரிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்பதும் அந்தத் தேசிய இனத்திற்கு பூரணமான சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் இனப்பிரச்சனைக்கான எந்த ஒரு தீர்வும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான இறைமையை முழுமையாக மதிப்பளிப்பதாக அமையவேண்டும்.

5. இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிக்கப்படுவது தான். அதாவது தேசத்தைத் தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலை, கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவதே இனப்பிரச்சினையாகும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

6. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. எனவே இவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். காணாமல் போனவர்கள் பலர் உயிருடன் இருக்கலாம்; அவர்களைக் கண்டுபிடித்தல் வேண்டும். உயிருடன் இல்லாதவர்களுக்கு அவர்களின் சொந்தங்களுக்கு தகுந்த நியாயமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். இவை தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஐ.நா. வினால் உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும்.

7. சுதந்திரத்திற்கு முன்னர் மேற் கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரத்தின் பின் திட்டமிட்டுத் தொடர்ந்தன. இதன் மூலம் தமிழர் தாயகத்தின் கிழக்குப்பகுதி திட்டமிட்டு சூறையாடப்பட்டது. இது ஒரு வகையாக மட்டும் இருக்கவில்லை. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்ட விரோத விவசாயக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், புனித பிரதேசக் குடியேற்றம், பௌத்தர்கள் அல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களையும் விகாரைகளையும் நிறுவுதல், முப்படைப்பண்ணைகளுக்கான குடியேற்றம் என பல வகைகளில் தொடர்ந்தன. பிரதேசத்தின் மக்கள் செறிவை செயற்கையாக மாற்றுவதும், தமிழ் மக்களின் கூட்டிருப்பைச் சிதைப்பதுமே இதன் நோக்கமாகும். கிழக்கில் உருவான குடியேற்றங்கள் இன்று வடக்கையும் சூறையாடுகின்றன. இக்குடியேற்றங்கள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து போராடுவதோடு இதனைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றை உருவாக்குதல் வேண்டும்.

8. தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் அகதி முகாம்களில் இருக்க படையினரோ மக்களின் நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். உல்லாச விடுதிகளை நடாத்துகின்றனர். போர் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியும் பறித்த காணிகளை இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. உடனடியாக அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படல் வேண்டும். தனியார் காணிகளில் இருந்து வெளியேறி அரச காணிகளில் படையினர் குடியேறும் போக்கும் இடம் பெறுகின்றது. அரச காணிகள் மக்களின் பொதுத் தேவைகளுக்குரியவை. உடனடியாக அனைத்துக் காணிகளிலிருந்தும் படையினர் வெளியேற வேண்டும்.

09. 2009 மே-18 இற்கு பின்னர் வடக்கு கிழக்கில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் உடனடியாக அகற்றப்பட்டேயாக வேண்டும்.

10. மூன்று தசாப்பங்களாக நடைபெற்ற போர் முடிவடைந்ததிலிருந்து, தமிழர்கள் போரால் இழந்த தங்கள் சொந்தங்களை சுதந்திரமாக நினைவுகூர அரசால் அனுமதிக்கப் படுவதில்லை. போரில் உயிர்நீத்தவர்களின் சமாதிகளை தகர்த்து அந்த இடங்களில் அரசபடைக்கான கட்டடங்கள் கட்டப்படுவது போன்ற சர்வதேச மனிதநேயத்துக்கெதிரன செயல்களை சிறிலங்கா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

11. தடுப்புக் காவலின் கீழ் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

விழி திறந்த உறக்க நிலையில் நின்று உலகத்தார் வேடிக்க பார்த்து நிற்க அனைத்துலக ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாத பேய்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஊழித்தாண்டவம் ஆடிய, உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற, இந்த நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பேரவலமாக இருக்கின்றபோதிலும், நடந்த இனவழிப்பிற்கான நீதியைப் பெற்றேயாக வேண்டுமென்ற உத்வேகத்தினை எமக்குள் விதைத்து அதை நோக்கியதாகவே எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றது வலிசுமந்த இந்நாட்கள். அந்த வகையில் கூடி அழுவதற்கான துக்க நாளாக அல்லாமல் உலகத் தமிழர்கள் ஒன்று கூடி எழுவதற்கான எழுச்சி நாளாக மே-18 இனை உலகத் தமிழர்கள் அனைவரும் கடைப்பிடிப்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்
ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு
தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*