எரிக் சொல்ஹெய்மின் செவ்வி தொடர்பில் பதில் வழங்க மறுத்த பீரிஸ்

நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்துள்ள செவ்வி தொடர்பாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் WION என்ற ஊடகத்தின் மூத்த வெளிவிவகார ஆசிரியர் பத்மா ராவ் சுந்தர்ஜிக்கு நீண்ட செவ்வி ஒன்றை அளித்துள்ளார்.

இதில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் எவ்வாறு தொடங்கப்பட்டன , விடுதலைப் புலிகளுடனான முதல் சந்திப்பு, புலிகளின் தலைவர் பிரபாகரனின் குணவியல்புகள், அமைதி முயற்சிகள் தோல்வி கண்டமைக்கான காரணங்கள், மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைவதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி மற்றும் சரணடையச் சென்றவர்கள் கொல்லப்பட்டமை, பாலச்சந்திரனின் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹெய்மின் இந்தச் செவ்வி குறித்து, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

எனினும் அவர் இதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்கத் தயாரில்லை என்று மறுத்துள்ளார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தற்போது, மகிந்த ராஜபக்ச அணியில், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்